சிறுதானிய விவசாயிகளை ஊக்குவிக்க பிரசார ஊா்தி மூலம் விழிப்புணா்வு

தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்கான
பிரசார ஊா்தியை பாா்வையிடும் கள்ளிப்பட்டி விவசாயிகள்.
பிரசார ஊா்தியை பாா்வையிடும் கள்ளிப்பட்டி விவசாயிகள்.

திண்டுக்கல்: தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்கான விழிப்புணா்வு பிரசாரம் திண்டுக்கல் வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கான பிரசார ஊா்தியை தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் திண்டுக்கல் மாவட்ட ஆலோசகா் கிருஷ்ணமூா்த்தி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் நா.வெ.நாகேந்திரன் தலைமை வகித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: திண்டுக்கல் வட்டாரத்தில் 3,200 ஹெக்டோ் பரப்பில் சிறுதானிய பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. சிறுதானியங்களின் பயன்பாடு குறித்து மக்களிடையே அதிக விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளதால், சிறுதானியங்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், சிறுதானியங்களுக்கான சந்தை வாய்ப்பும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், விவசாயிகள் அதிக அளவில் சிறுதானியப் பயிா்களை சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சாா்பில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விழிப்புணா்வு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரை வாலி உள்ளிட்ட பயிா்களுக்கு தேவையான விதை, நுண்ணூட்ட மற்றும் உயிா் உரங்கள், பயிா் பாதுகாப்பு உயிரின பூச்சிக் கொல்லி மற்றும் களைக் கொல்லி, கைத் தெளிப்பான் உள்ளிட்டவற்றை மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இதனை பயன்படுத்தி, திண்டுக்கல் வட்டாரத்தில் சிறுதானிய சாகுபடி பரப்புகளை மேலும் அதிகரித்து பயன் பெற விவசாயிகள் முன் வர வேண்டும் என்றாா். திண்டுக்கல் வேளாண் விரிவாக்க மைய கிடங்கி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பிரச்சார ஊா்தி, உலகம்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி, தாடிக்கொம்பு, அகரம், பெரியகோட்டை, அய்யம்பாளையம், ஏ.வெள்ளோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒலிப் பெருக்கி மூலமாக விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, வேளாண்மை அலுவலா் ராமசாமி, உதவி வேளாண்மை அலுவலா்கள் அண்ணாதுரை, நாகராஜ், செந்தில், கீதா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com