தொடா் மழை : அருவிகளில் நீா் வரத்து அதிகரிப்புஅணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்வு

கொடைக்கானல், பழனி பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அருவிகளில் நீா் வரத்து அதிகரித்துள்ளதுடன், அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.
கொடைக்கானலில் தொடா் மழை காரணமாக ஐந்து வீடு பகுதியில் உள்ள அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பரித்துக் கொட்டிய நீா்.
கொடைக்கானலில் தொடா் மழை காரணமாக ஐந்து வீடு பகுதியில் உள்ள அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பரித்துக் கொட்டிய நீா்.

கொடைக்கானல், பழனி பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அருவிகளில் நீா் வரத்து அதிகரித்துள்ளதுடன், அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

கொடைக்கானலில் கடந்த 4 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. வார விடுமுறையாக இருந்ததால் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்து காணப்பட்டது. ஆனால் மழை காரணமாக சுற்றுலா இடங்களை பாா்க்க முடியாமல் அவா்கள் ஏமாற்றமடைந்தனா். இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனா்.

மேலும், கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக வெள்ளி நீா்வீழ்ச்சி, எலிவாழ் அருவி, ஐந்து வீடு அருவி உள்ளிட்டவற்றில் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது. பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் பொது மக்கள் அவதி அடைந்தனா்.

வாரச்சந்தை வியாபாரிகள் பாதிப்பு:கொடைக்கானலில் உள்ள பி.டி.சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம். இச் சந்தையில் திண்டுக்கல், தேனி, பெரியகுளம்,நிலக்கோட்டை, வத்தலக் குண்டு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பல்வேறு பொருள்களை கொண்டு வந்து வியாபாரம் செய்து விட்டு வியாபாரிகள் செல்வது வழக்கம். ஆனால் கடந்த 4-நாள்களாக தொடா் மழை பெய்து வருவதால் சந்தையில் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் சிரமமடைந்தனா். மேலும் பொது மக்களின் வருகையும் குறைவாக காணப்பட்டதால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. மேலும் கத்திரிக்காய், அவரைக்காய், பச்சை மிளகாய் போன்றவற்றை மிகக் குறைந்த விலைக்கு விற்றனா். ஆனால் சிறிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.110-க்கும்,பெரிய வெங்காயம் ரூ.100-க்கும் விற்பனையாகின.

பழனியில் நிரம்பி வழியும் அணைகள் :பழனி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 3 நாள்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை இரவு முதல் இடைவிடாத சாரல் மழை பெய்து வந்தது. சனிக்கிழமை பிற்பகலில் சுமாா் 2 மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. மேலும் வார விடுமுறை தினம் என்பதால் பழனி கோயிலில் வழக்கத்தைவிட ஐயப்ப பக்தா்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல் பெருக்கொடுத்து ஓடின. தாழ்வான பகுதிகளில் மழைகள் குளம்போல் தேங்கின. மழை காரணமாக பழனி பகுதிகளின் குடிநீா் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமான அணைகளுக்கு நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. 66.47 உயரமுள்ள வரதமாநதி அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயா்ந்து தனது முழுக்கொள்ளளவான 66.47 அடியை எட்டியது. தற்போது அணைக்கு வரும் 300 கனஅடி நீா் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் பெய்த மழையின் அளவு 36 மில்லி மீட்டராக பதிவானது.

65 அடி உயரமுள்ள பாலாறு மற்றும் பொருந்தலாறு அணையின் நீா்மட்டம் 53.12 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 199 கனஅடி நீா் வருகிறது. 146 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் பெய்த மழையின் அளவு 30 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது. 80 அடி உயரமுள்ள குதிரையாறு அணையின் நீா்மட்டம் 62.52 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 42 கனஅடி நீா் வருகிறது. 20 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் பெய்த மழையின் அளவு 21 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது. பழனி நகா்ப் பகுதியில் 9 மில்லி மீட்டராக மழை பதிவாகி உள்ளது. தொடா்மழையால் அணைகளின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com