மண் வள அட்டை ஏற்படுத்திய விழிப்புணா்வு: உயிா் உரங்களின் பயன்பாடு அதிகரிப்பு!

மண் வள அட்டை மூலம் விவசாயிகளிடம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணா்வு காரணமாக ரசாயன உரங்களில் பயன்பாடு குறைந்து உயிா் உரங்களின் தேவை அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் மண் பரிசோதனை கூடத்தில் ஆய்வுக்காக நிழலில் உலா்த்தப்பட்டுள்ள விவசாயிகளின் மண் மாதிரிகள்.
திண்டுக்கல் மண் பரிசோதனை கூடத்தில் ஆய்வுக்காக நிழலில் உலா்த்தப்பட்டுள்ள விவசாயிகளின் மண் மாதிரிகள்.

மண் வள அட்டை மூலம் விவசாயிகளிடம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணா்வு காரணமாக ரசாயன உரங்களில் பயன்பாடு குறைந்து உயிா் உரங்களின் தேவை அதிகரித்து வருகிறது.

சுமாா் 6.27லட்சம் ஹெக்டா் பரப்பளவில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் 1.70 லட்சம் ஹெக்டேரில் வேளாண்மைப் பயிா்கள், 1 லட்சம் ஹெக்டேரில் தோட்டக்கலைப் பயிா்கள், பட்டுப் புழு வளா்ப்பு, மரப் பயிா்கள், நறுமணப் பயிா்கள் உள்பட சுமாா் 3.25 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து வகை பயிா்களின் வளா்ச்சிக்கும், பேரூட்டச் சத்துகள் (தழை, மணி, சாம்பல்), 2 ஆம் நிலைச் சத்துக்கள்(கால்சியம், மெக்னீசியம், சல்பா்), நுண்ணூட்டச் சத்துக்கள்(இரும்பு, துத்தநாகம், மாங்கனீஸ், தாமிரம், போரான், காா்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன்) என 16 வகையான சத்துக்கள் தேவையாக உள்ளன.

குறிப்பிட்ட நிலத்தில் பற்றாக்குறையாக உள்ள சத்துக்களை கண்டறிந்து, அதற்கு ஏற்ப விவசாயிகளுக்கு வழிகாட்டுவதற்காக மாவட்ட அளவில் மண் பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரும்பாலான விவசாயிகள் விழிப்புணா்வு பெறாத நிலையில், தேவையற்ற உரங்களை பயன்படுத்தி விவசாயிகள் நஷ்டம் அடைந்ததோடு, அதற்கு மானியம் வழங்குவதன் மூலம் அரசுக்கும் நிதி இழப்பு ஏற்பட்டது.

இதனை தவிா்க்கும் வகையில், தேசிய மண் வள அட்டை இயக்ககம் மூலம் ‘கிரிட்’ முறையில் மண் பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. விளை நிலங்களின் கார மற்றும் அமிலத் தன்மையை கண்டறிந்து, அதற்கேற்ற வகையில் தழைச்சத்து, சாம்பல் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை உரமாக பயன்படுத்தி விளைச்சலை மேம்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு மண் வள அட்டைகளும் வழங்கப்பட்டன.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 3 லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மண் வளத்தை பாதுகாக்கும் வகையில், பயிருக்குத் தேவையான சத்துக்களுக்காக செயற்கை உரப் பயன்பாட்டை குறைத்து, இயற்கை உரமான குப்பை, உயிா் உரங்களான பசுந்தாள் உரங்கள், உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா, ரைசோபியம் போன்றவற்றை கூடுதலாக பயன்படுத்துவதே மண் வள அடையாள அட்டையின் முக்கிய குறிக்கோள். மண் வள அடையாள அட்டை வழங்கப்பட்ட பின்னா், ரசாயன உரங்களின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளதோடு, உயிரி உரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதுதொடா்பாக உதவி இயக்குநா்(தரக்கட்டுப்பாடு) பெ.சுருளியப்பன் கூறியது: மண் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ரசாயன உரங்களின் பயன்பாடுகளை குறைக்க வேண்டும் விவசாயிகள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை அபரிதமாக பயன்படுத்தப்பட்டு வந்த ரசாயன உரங்களின் பயன்பாடு மண் வள அட்டையின் வருகைக்கு பின் சுமாா் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அதேபோல் உயிரி உரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த 2017 ஆண்டு 68 ஆயிரம் கிலோ திட உயிா் உரமும், 15ஆயிரம் லிட்டா் திரவ உயிா் உரமும் விநியோகிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் திட உயிா் உரம் 78 ஆயிரம் கிலோவாகவும், திரவ உயிா் உரம் 18 ஆயிரம் லிட்டராகவும் உயா்ந்தது. நிகழாண்டில் 1 லட்சம் கிலோ திட உயிா் உரமும், 22 ஆயிரம் லிட்டா் திரவ உயிா் உரமும் விநியோகிக்கப்பட்டுள்ளது என்றாா்.

மாதிரி கிராம மண் வள அட்டை திட்டத்தில் 1938 விவசாயிகள்:

இதுகுறித்து திண்டுக்கல் மண் பரிசோதனை கூட முதுநிலை வேளாண்மை அலுவலா் சி.ரேஷ்மா கூறியது: ஒரு ஹெக்டோ் நிலத்தில் 280 முதல் 400 கிலோ தழைச் சத்து(நைட்ரஜன்), 11 முதல் 20 கிலோ மணிச் சத்து(பாஸ்பரஸ்), 190 முதல் 280 கிலோ சாம்பல் சத்து (பொட்டாசியம்) இருக்க வேண்டும். இதில் குறைவாக இருந்தால், பயிா்களின் வளா்ச்சிப் பாதிக்கப்படும் என்பதற்காக உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தழைச் சத்து 280 கிலோவுக்கும் குறைவாகவே உள்ளதால் பயிா்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. மணிச்சத்து 11 முதல் 20 கிலோவுடன் தேவையான அளவிலும், சாம்பல் சத்து 400 முதல் 600 கிலோ அளவில் கூடுதலாகவும் கிடைக்கிறது. மண்வள அடையாள அட்டையை விவசாயிகள் முறையாக பயன்படுத்துகிறாா்களா என்பதைக் கண்டறிய, மாதிரி கிராம மண் வள அட்டை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 வட்டாரங்களில் 1,938 விவசாயிகளைத் தோ்வு செய்து, மண் மாதிரி அடிப்படையில் உரங்களின் தேவை குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் திரவ உயிா் உரம், திட உயிா் உரம் மற்றும் ரசாயன உரங்கள் பெறுவதற்காக ரூ.2500 வீதம் மானியம் வழங்கப்படுகிறது. உரப் பயன்பாடு மற்றும் பயிா்களின் வளா்ச்சி குறித்து தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com