கொடைக்கானலில் விதி மீறல் கட்டடங்களுக்கு சீல் வைப்பு: நகராட்சி நடவடிக்கையை நிறுத்தக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

கொடைக்கானலில்  விதிமுறைகளை மீறிய கட்டடங்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வரும்

கொடைக்கானலில்  விதிமுறைகளை மீறிய கட்டடங்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதனை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. 
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அனுமதியில்லாத கட்டடங்கள் மற்றும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை  பூட்டி சீல் வைக்கவும், மின் இணைப்புகளை துண்டிக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம், விதிமுறைகளை மீறிய 49 கட்டடங்களை பூட்டி சீல் வைத்தது. மேலும், விதிமுறைகளை மீறிய 1,415 கட்டடங்களை கண்டறிந்து நோட்டீஸ் அனுப்பியது.  இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், கொடைக்கானலைச் சேர்ந்த சிலர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொடைக்கானலைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்தனர். 
இதுதொடர்பாக அவர்கள் கூறியது: கொடைக்கானலில் கடந்த 1976 ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அன்றைய மக்கள் தொகைக்கு ஏற்ப நகர வரைவு முழுமைத் திட்டம் (மாஸ்டர் பிளான்) உருவாக்கப்பட்டு, கடந்த 1993ஆம் ஆண்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டது.  ஆனால், 1976 முதல் 1993க்கு இடைப்பட்ட 18  ஆண்டுகள் இடைவெளியில், கொடைக்கானல் மக்கள் தொகை மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.  மேலும், மாஸ்டர் பிளான் 5 ஆண்டுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற வரைமுறையும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 
 ஆனால், கடந்த 21 ஆண்டுகளாக மாஸ்டர் பிளான் மறு ஆய்வு செய்யப்படவில்லை. இதனிடையே, உள்கட்டமைப்பு வசதிக்காக பொதுமக்கள் பல்வேறு இடங்களில் வீடுகளை கட்டி வசிக்கத் தொடங்கினர். அதேபோல் கடைகள், மருத்துவமனைகள், பள்ளி என கட்டடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் கட்டடங்களுக்கு நோட்டீஸ், சீல் வைப்பு என மேற்கொண்டுள்ள நடவடிக்கை பொதுமக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. அதனால், கொடைக்கானல் வரையறை மற்றும் புதுப்பிக்கப்பட்ட முழுமைத் திட்டம் அமலுக்கு வரும் வரை, கட்டடங்கள் மீதான நகராட்சி நடவடிக்கையை கைவிட வேண்டும் என தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com