பழனி அருகே குளங்களில் முறைகேடாக மீன் வளர்ப்பு: அரசுக்கு வருவாய் இழப்பு

பழனி அருகே குளங்களில் முறைகேடாக மீன் வளர்த்து தனியாருக்கு விற்பனை செய்வதால், அரசுக்கு

பழனி அருகே குளங்களில் முறைகேடாக மீன் வளர்த்து தனியாருக்கு விற்பனை செய்வதால், அரசுக்கு லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சுற்றியுள்ள அணை, குளங்களில் மீன்வளர்த்து விற்க மீன்வளத் துறை ஏற்பாடு செய்துள்ளது. பழனியில் உள்ள மீனவர் கூட்டுறவு சங்கம், மீன்வளத் துறை உதவியுடன் குளங்களில் மீன்பிடிக்க ஒப்பந்தங்கள் மேற்கொண்டு, அதன்மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. 
இந்நிலையில், தற்போது மீனவர் சங்க நிர்வாகிகள் முறைகேடாக தனியார் பண்ணைகளில் மீன் குஞ்சுகளை வாங்கி, குளங்களில் வளர்த்து அவற்றை தனியாருக்கு விற்பனை செய்து வருகின்றனர்.  இதனால், அரசுக்கு லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, சங்க உறுப்பினர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை, பழனியை அடுத்த அய்யம்புள்ளி குளத்தில் மீன்பிடிக்க வந்த நபர்களை, மீனவர் சங்க உறுப்பினர்கள் முனியப்பன், கருப்புச்சாமி, தங்கராஜ் உள்ளிட்ட பலர் திருப்பி அனுப்பினர்.
இது குறித்து முனியப்பன் கூறியது: பழனியில் குளங்களில் மீன்வளர்த்து பிடிக்கும் போது, அதில் குறிப்பிட்ட வருவாய் அரசுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பழனி மீனவர் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் மீன் வளர்த்து விற்பதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
குளங்களில் வளர்க்க வேண்டிய மிருகால், கட்லா போன்ற மீன்குஞ்சுகள், நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டியிலுள்ள அரசு மீன் பண்ணையில் ஐம்பது காசுக்கு கிடைக்கிறது. ஆனால், சங்க நிர்வாகிகள் ஆந்திரத்திலுள்ள தனியார் பண்ணையில் ரூ.1.50-க்கு வாங்கி குளங்களில் விடுவதாக, கணக்கு காட்டுகின்றனர். இதனால், சங்கத்துக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது.
அதேபோல், வையாபுரி குளம், இடும்பன்குளம், பாப்பாகுளம், புதுக்குளம் உள்ளிட்ட 6 குளங்களில் மீன் வளர்க்க விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால், இந்த குளங்களிலும் இரவோடு இரவாக லட்சக்கணக்கான மீன் குஞ்சுகளை வளர்த்து விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து மீன்வளத் துறை ஆய்வாளர், உதவி இயக்குநர் ஆகியோரிடம் முறையிட்டும் பலனில்லை. 
பல ஆண்டுகளாக சங்க உறுப்பினர்களுக்கு வலை உள்ளிட்ட எந்த அரசு சலுகைகளும் கிடைக்கவில்லை. மீன்பிடிப்பில் லட்சக்கணக்கான வருவாய் கிடைக்கும் நிலையில், ஆண்டுதோறும் குறிப்பிட்ட சில ஆயிரம் ரூபாயையே கணக்கு காட்டிவிட்டு, மீதிப் பணத்தை சங்கத்தினர் ஏமாற்றி விடுகின்றனர். எனவே, இனி மேலாவது மீன் குஞ்சுகளை அரசுப் பண்ணையில் வாங்கி, வெளிப்படையாக சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் குளங்களில் விடவேண்டும். அவற்றை பிடிக்கும் போதும் வெளிப்படைத் தன்மையுடன் பிடிக்க வேண்டும். 
இல்லையெனில், ஓரிரு மாதங்களில் மீன்பிடிக்கும் போது மீனவர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகிறது. என்றார்.
எனவே, இது குறித்து முறையான கணக்குகளை பராமரிக்க, மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் ஆணையிட வேண்டும் என்பதே, மீனவர் சங்க உறுப்பினர்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com