மாவட்ட அளவிலான யோகா போட்டியில் 13 பேர் மட்டுமே பங்கேற்பு: உடற்பயிற்சி ஆசிரியர்கள் அதிர்ச்சி!

திண்டுக்கல் மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் சார்பில், கல்வி மாவட்ட அளவில் திங்கள்கிழமை

திண்டுக்கல் மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் சார்பில், கல்வி மாவட்ட அளவில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட யோகா போட்டியில், 13 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றது உடற்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்போட்டியில், திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், வத்தலகுண்டு ஆகிய 4 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், பள்ளிக்கு தலா ஒரு மாணவர், மாணவியர் வீதம் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
அதன்படி, திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அடுத்துள்ள காந்திஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் யோகா போட்டிகள் நடைபெற்றன. இதில், சூரிய நமஸ்காரம், நின்ற, அமர்ந்த மற்றும் படுத்த நிலையில் செய்யும் ஆசனங்கள், பிரணாயாமம் என 30 வகையான ஆசனங்களில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில், போட்டி விதிகள் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால், இப்போட்டிகளில் பழனி மற்றும் வேடசந்தூர் கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவர் கூட பங்கேற்கவில்லை.அதேபோல், வத்தலகுண்டு கல்வி மாவட்டத்தில் கன்னிவாடியைச் சேர்ந்த ஒரு மாணவர் மட்டுமே கலந்துகொண்டார். திண்டுக்கல் கல்வி மாவட்டத்தின் சார்பில் 12 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதனால், போட்டி ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
இது தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர்கள் சிலர் கூறியது: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. 
இந்த போட்டிக்கு, மாவட்டம்  முழுவதுமுள்ள 196 பள்ளிகளிலிருந்து 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் தலா இருவரை அனுப்பி இருக்கலாம். ஆனால், 
2 கல்வி மாவட்டங்களிலிருந்து ஒரு மாணவர் கூட பங்கேற்கவில்லை. கல்வித் துறை சார்பில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்றால், அதிகபட்சமாக 80 மதிப்பெண்ணும் மற்றும் பங்கேற்புக்காக குறைந்தபட்சமாக 15 மதிப்பெண் வீதமும் வழங்கப்படுகிறது. இந்த மதிப்பெண்கள், அந்த மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்குப் பயன்படும் என்பது  தெரியும்.  
அங்கீகாரம் இல்லாத சங்கங்கள் நடத்தும் போட்டிகளில் கூட மாணவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால், கல்வித் துறை சார்பில் நடைபெறும் இப்போட்டி, கல்வித் துறை அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் ஒத்துழைப்பு இல்லாததால், மாணவர்கள் பங்களிப்பு கேள்விக்குறியாகியுள்ளது எனத் தெரிவித்தனர்.
இது தெடார்பாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்க அலுவலர் ஒருவர் கூறியது: கடந்த வெள்ளிக்கிழமை இப்போட்டி தொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சனிக்கிழமையும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. 
ஆனால், மொத்த பங்கேற்பாளர்களே 13 பேர் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இனிவரும் நாள்களில் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களின் பங்களிப்பை அனைத்து அரசுப் பள்ளிகளும் உறுதி செய்ய வேண்டும் என கட்டாயமாக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com