"சாகித்ய அகாதெமி புதிய படைப்பாளிகளை உருவாக்கவும் முயற்சிக்கிறது'

சாகித்ய அகாதெமி விருது கொடுக்கும் அமைப்பாக மட்டுமின்றி, புதிய படைப்பாளிகளை

சாகித்ய அகாதெமி விருது கொடுக்கும் அமைப்பாக மட்டுமின்றி, புதிய படைப்பாளிகளை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது என எழுத்தாளரும், சாகித்ய அகாதெமியின் பொதுக் குழு உறுப்பினருமான மாலன் தெரிவித்தார்.
 சாகித்ய அகாதெமி மற்றும் திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் "பிஆர்.ராஜம் ஐயரும், தொடக்க காலத் தமிழ் நாவல்களும்' என்ற தலைப்பில் உரையரங்கம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பல்கலை. பதிவாளர் வி.பி.ஆர்.சிவக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளரும், சாகித்ய அகாதெமியின் பொதுக் குழு உறுப்பினருமான மாலன் கலந்து கொண்டு பேசியதாவது: 
சாகித்ய அகாதெமி விருது கொடுக்கும் அமைப்பு மட்டுமல்ல. இளைஞர்களை புதிய படைப்பாளிகளாக உருவாக்கும் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது. பிற மாநில படைப்பாளிகளை சந்தித்து விவாதித்து, ஆய்வு மேற்கொள்வதற்கான பயணத்திட்டத்துக்கான செலவுத் தொகையை இளைஞர்களுக்கு வழங்கி ஊக்குவிக்கும் பணிகளையும் சாகித்ய அகாதெமி அமைப்பு செய்து வருகிறது. அதேபோல், கிராமப்புறங்களில் புதிய எழுத்தாளர்களை உருவாக்குவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. 
 இலக்கியத்திற்கும், ஊடகத்திற்குமான உறவு, கணவன் - மனைவி இடையிலான உறவினைப் போன்றது. அதில் கூடல் இருப்பதைப் போல் முரண்பாடுகளும் உண்டு. நாவல், சிறுகதை, பத்திரிகை போன்ற படைப்புகள் அனைத்தும், ஆங்கில வழிக் கல்விக்கு பின்னரே நமக்கு  கிடைத்துள்ளன. உருவத்திலும், மரபிலும் இந்தியர்களாக இருந்தாலும், ரசனையிலும், நினைவாற்றலிலும் ஆங்கிலேயர்களைப் போல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஆங்கில கல்வி முறையை மெக்காலே இந்தியாவில் நடைமுறைப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக பார்சி மற்றும் சம்ஸ்கிருத மொழிகளை கல்வி நிறுவனங்களில் கற்பிக்கக் கூடாது என உத்தரவிட்டனர். அதற்கு மாற்றாக ஆங்கிலத்தை கற்பித்து, பாரசீக, சம்ஸ்கிருத இலக்கியங்களை அழிக்க முயற்சித்தனர். அதில் வெற்றியும் பெற்றுவிட்ட ஆங்கிலேயர்கள், தமிழ் மொழியிடம் தோற்றுவிட்டனர். 
இந்தியாவில் தொடக்க கால நாவல்கள், நீதித்துறையில் பணியாற்றியவர்களின் மூலமாகவே எழுதப்பட்டுள்ளது. ஆங்கில கல்வி மூலம் இலக்கியங்களை கற்றறிந்த பலர், அவரவர் தாய்மொழியில் நாவல்களை எழுதத் தொடங்கினர். நாவல்களின் வளர்ச்சி, தமிழ் மட்டுமின்றி இந்திய தேசத்தின் பல்வேறு மொழிகளையும் அழியாமல் பாதுகாத்துள்ளது. காவிய மரபு, உரைநடை நாவல்களில் பின்பற்றப்படாததால், இலக்கியவாதிகள் மட்டுமல்லாமல் பாமர மக்களையும் அந்த படைப்புகள் சென்றடைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. நாவல்கள் எழுதுவதற்கு ஒழுக்க நெறிகள், ஆழ்மனத் தேடல், சமூக சீர்த்திருத்தம் ஆகிய 3 பாதைகளை பின்பற்ற வேண்டும். இந்த தடத்திலேயே இன்று வரை தமிழ் படைப்புகள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் மொழியில் உரைநடை நிலைத்திருப்பதற்கும், வளர்ச்சிப்  பெறுவதற்கும் பத்திரிகைகளும், நாவல்களுமே முக்கிய காரணம் என்றார்.
நிகழ்ச்சியில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பா.ஆனந்தகுமார், சாகித்ய அகாதெமி விருதாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மறு வாசிப்பில் பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம் ஒரு மதிப்பீடு, பத்மாவதி சரித்திரம் ஒரு மதிப்பீடு, மாதவையா நாவல்களின் வரலாற்று, சமூக  பின்புலம், தொடக்கக் காலத் தமிழ் துப்பறியும் நாவல்கள், தொடக்கக் காலத்தில் தமிழ் நாவல்களும், பண்பாட்டுவயமாக்கமும் என்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com