அய்யலூர் அருகே வனச் சாலையை சீரமைக்கக் கோரி அரசுப் பேருந்து சிறைபிடிப்பு
By DIN | Published On : 15th February 2019 08:02 AM | Last Updated : 15th February 2019 08:02 AM | அ+அ அ- |

அய்யலூர் அருகே வனச் சாலையை சீரமைக்கக் கோரி, பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரிலிருந்து ஏ.கோம்பை, பஞ்சந்தாங்கி, காக்காயன்பட்டி, கிணத்துப்பட்டி ஆகிய கிராமங்கள் வழியாக செந்துறைக்கு செல்லும் வனச் சாலை உள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த சாலை, தற்போது சிதிலமடைந்துள்ளது. இதனை சீரமைக்க, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தபோதிலும், வனத் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், பஞ்சந்தாங்கியிலிருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு வியாழக்கிழமை புறப்பட்ட அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போலீஸாரின் சமரசத்தை பொதுமக்கள் ஏற்க மறுத்தனர்.
வனத் துறையினருடன் பேசி, துரிதமாக சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதி அளித்தனர். அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதில், காலை 9.30 மணிக்கு சிறைபிடிக்கப்பட்ட அரசுப் பேருந்து, 3 மணி நேரத்துக்கு பின் பிற்பகல் 12.30 மணிக்கு விடுவிக்கப்பட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.