பழனி அருகே வீடுகளில் தொடர் திருட்டு: பொதுமக்கள் அச்சம்

பழனி அருகே குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து 2 நாள்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திருட்டு நடந்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 

பழனி அருகே குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து 2 நாள்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திருட்டு நடந்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 
      திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள ஆர்.ஜி. நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், அடிக்கடி திருட்டு நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். 
     இந்நிலையில், இப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வேலுச்சாமி என்பவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ஒன்றரை லட்சம் பணம் திருடப்பட்டது. இதேபோல், அப்பகுதியில் உள்ள கஸ்தூரி என்பவர் வீட்டில் சனிக்கிழமை இரவு திருடப்பட்டுள்ளது.
       ஓய்வுபெற்ற ஆலை அதிகாரியான கஸ்தூரி (55) மற்றும் இவரது மனைவி சாவித்திரி ஆகிய இருவரும், சில தினங்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள தனது மகளைப் பார்க்க வீட்டை பூட்டி விட்டுச் சென்றுவிட்டனர். இதையறிந்த மர்ம நபர்கள், அவரது வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர், காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 
     கஸ்தூரி வீட்டில் திருடுபோன பொருள்களின் மதிப்பு தெரியாத நிலையில், பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து கஸ்தூரி மற்றும் வெளியூரில் உள்ள அவரது மகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
     இதனிடையே, இவரது வீட்டை மர்மநபர் நோட்டம் விட்டு திருட முயற்சிப்பது அங்கு பொருத்தப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்புக் கேமராகளில் பதிவாகியுள்ளது.  திருடனின் உருவத்தை கண்டறிந்துள்ள போலீஸார், தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இப்பகுதியில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, இப்பகுதியில் போலீஸார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com