பழனி மகளிர் கல்லூரியில் மொழி, கலாசார இணைவு கருத்தரங்கம்
By DIN | Published On : 20th February 2019 07:06 AM | Last Updated : 20th February 2019 07:06 AM | அ+அ அ- |

பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கல்லூரியில் ஆங்கில உயராய்வுத் துறை சார்பில் இலக்கியங்களில் மொழி மற்றும் கலாசார இணைவு என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். இரு அமர்வாக நடைபெற்ற இக்கருத்தரங்கில் இலங்கை ஜப்னா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் கந்தையா ஸ்ரீகணேசன் ஆங்கில மொழி பெயர்ப்பில் நாடகங்களின் பங்கு என்ற தலைப்பிலும், கோவில்பட்டி கே.ஆர்.கலைக்கல்லூரி பேராசிரியர் பாலகிருஷ்ணன் இலக்கியங்கள் வழியில் கலாசாரத்தை எடுத்துக் கூறுதல் என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினர். கருத்தரங்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் என பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
விழாவில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ஆங்கிலக் கவிதைகளை நாடகமாக்கி நடித்துக் காட்டினர். பழனியாண்டவர் கல்லூரியின் ஆங்கிலத்துறை மாணவியர் ஜூலியஸ் சீஸர் நாடகத்தை நடித்துக் காட்டினர். கருத்தரங்கில் 110 ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டது.
சிறந்த ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக துறைத் தலைவர் செல்வி வரவேற்றார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் வனிதா, பிரியா, சந்திரா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.