பழனி மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்
By DIN | Published On : 20th February 2019 07:11 AM | Last Updated : 20th February 2019 07:11 AM | அ+அ அ- |

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மாசிமகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை உலக நலன் வேண்டி மூலவருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
கோயிலில் 60 ஆவது ஆண்டாக 1008 சங்காபிஷேகம் நடைபற்றது. இதையொட்டி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் தங்கச் சப்பரத்தில் கலசங்கள் வைக்கப்பட்டு 1008 சங்குகள் சுற்றிலும் அடுக்கப்பட்டு அவற்றில் புனிதநீர் நிரப்பப்பட்டது.
பின்னர் சங்குகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஏராளமான சிவாச்சாரியர்கள் வேதமந்திரம் முழங்க யாக பூஜை நடைபெற்றது. இதில் பூர்ணாஹூதி முடிந்த பின்னர் கலசங்கள் மற்றும் சங்குகள் மேளதாளம் முழங்க கோயிலை சுற்றி எடுத்துவரப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு சோடஷ உபசாரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.