முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
உலக நலன் வேண்டி பழனியில் வசூர்தாரா யாகம்
By DIN | Published On : 28th February 2019 08:06 AM | Last Updated : 28th February 2019 08:06 AM | அ+அ அ- |

பழனியில் உலக நலன் வேண்டி வசூர்தாரா யாகம் மற்றும் பழனியாண்டவருக்கு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பழனி அருள்ஜோதி வீதி சங்கராலய மடத்தில் உலக நலன் வேண்டி சிறப்பு வேள்வி யாக பூஜைகள் நடைபெற்றது. மடத்தின் முன்பாக சுமார் 10 அடி உயரத்தில் யாககுண்டம் அமைக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் யாகத்தில் கலந்து கொண்டனர்.
அதிகாலை முதலே கலசங்கள் வைக்கப்பட்டு அவற்றுக்கு அரளி, சம்பங்கி, மல்லிகை போன்ற மலர்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற யாக வேள்வியின் போது யாக குண்டத்தில் வாசனைத் திரவியங்கள், மூலிகைகள், பழங்கள், நவதானியங்கள், பட்டு வஸ்திரம் மற்றும் தங்கம் போன்றவை இடப்பட்டு வசூர்தாரா யாகம் வளர்க்கப்பட்டது. பூர்ணாஹூதி முடிந்த பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து உச்சிக்காலத்தின் போது பஞ்சாமிர்தம், பால், பன்னீர் நிரம்பிய நூற்றுக்கும் மேற்பட்ட கலசங்கள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக புறப்பாடு செய்யப்பட்டு கிரிவலப்பாதையில் சுற்றி படிவழியாக பழனி மலைக் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சங்கராலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் இங்கு நாள்தோறும் நித்திய அன்னதான திட்டமும் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முருகனடிமை பாலசுப்பிரமணியம், ஆடிட்டர் அனந்த சுப்ரமணியம், நவி மும்பை சேஷாத்ரி, சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.