Enable Javscript for better performance
நீர்நிலையிலுள்ள மரங்களை வெட்ட 2 ஆண்டுகள் இழுத்தடிப்பு: வனத்துறை மீது விவசாயிகள் புகார்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்

    நீர்நிலையிலுள்ள மரங்களை வெட்ட 2 ஆண்டுகள் இழுத்தடிப்பு: வனத்துறை மீது விவசாயிகள் புகார்

    By DIN  |   Published On : 28th February 2019 08:05 AM  |   Last Updated : 28th February 2019 08:05 AM  |  அ+அ அ-  |  

    ஒட்டன்சத்திரம் அருகே  கண்மாய் சீரமைப்புக்கு இடையூறாக உள்ள 4ஆயிரம்  கருவேல  மரங்களை அப்புறப்படுத்துவதற்கு  வனத்துறையினர் முட்டுக்கட்டை ஏற்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
    திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வீ.மனோகரன் முன்னிலை வகித்தார். 
    கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு: சத்திரப்பட்டி அடுத்துள்ள கருங்குளத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றிவிட்டு, தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சித்து வருகிறோம். மரங்களை ஏலம் விடுவதற்காக 2 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட  வனத்துறை,  தற்போது  ஏலம் விட்டு 6 மாதங்களாகியும் மரங்களை வெட்டுவதற்கு நடவடிக்கை  மேற்கொள்ளவில்லை என விவசாயி அழகியண்ணன் புகார் தெரிவித்தார். 
    இதற்கு வனத்துறை சார்பில் சரியான பதில் அளிக்கவில்லை. கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த வேளாண்மை இணை இயக்குநர் மனோகரன், சம்பந்தப்பட்ட துறை மூலம் உரிய பதில் தரப்படும் என கூறி சமாளித்தார். அதற்கு கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
    இதுதொடர்பாக அவர்கள் பேசுகையில், கருங்குளம் பிரச்னை கடந்த 3 ஆண்டுகளாக தொடர்கிறது. மாவட்ட ஆட்சியர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வனத்துறையினரைக் கண்டித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஏலம் எடுத்தவர்களுக்கு ஆதரவாகப் பேசும் வனத்துறையினர், விவசாயிகளுக்கான பாதிப்புகள் குறித்து கண்டுகொள்வதில்லை. 
    4 ஆயிரம் கருவேல மரங்களை அகற்றினால்தான் அந்த கண்மாயைத் தூர் வார முடியும். ஆனால், விவசாயிகள் சொல்லிச் செய்ய வேண்டுமா? என வனத்துறையினர் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினர். 
    சலசலப்பு: கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இல்லாததால், மதியம் 1.15 மணிக்கு சில விவசாயிகள் மனுக்களை அளிக்க முயற்சித்தனர். 
    அந்த மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் ஆகியோர் வாங்கியதால், குறைகளைத் தெரிவிக்க காத்திருந்த விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். மனுக்களை வாங்குவதை நிறுத்த கோரியும், குறைகளைப் பேச அனுமதிக்க வேண்டும் என்றும்  சில விவசாயிகள் கோஷமிட்டனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அலுவலர்கள் மனுக்களை வாங்குவதை நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து மீண்டும் விவசாயிகள் தங்கள்  கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். 
    நிலக்கோட்டையை அடுத்துள்ள விளாம்பட்டி பகுதியில் வைகை ஆற்றில் இரு போக சாகுபடிக்கு தண்ணீர் தருவதாக உறுதி அளித்தனர். 
    தற்போது 90 நாள்கள் மட்டுமே தண்ணீர் கொடுத்துள்ளனர். மேலும் 30 நாள்களுக்கு தண்ணீர் கிடைத்தால் மட்டுமே நிலக்கோட்டை பகுதியில் 1893 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற் பயிர்களை பாதுகாக்க முடியும். 
    மேலும், 20 நாள்களுக்கு மும்முனை மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி ராஜேந்திரன் வலியுறுத்தினார். அதற்குப் பதில் அளித்த மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, தண்ணீர் திறக்கவும், மும்முனை மின்சார வசதி கிடைப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp