முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பில்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு: 16 பேர் காயம்
By DIN | Published On : 28th February 2019 08:06 AM | Last Updated : 28th February 2019 08:06 AM | அ+அ அ- |

திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 16 மாடு பிடி வீரர்கள் காயம் அடைந்தனர்.
பில்லமநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீகதிர் நரசிங்கப்பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 444 காளைகள் அழைத்துவரப்பட்டன.
கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் சி.சுப்பையாபாண்டியன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் காளைகளை பரிசோதித்தனர். அதில், 14 காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, 430 காளைகள் வாடிவாசலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டன.
அதேபோல் 352 மாடு பிடி வீரர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு காரணங்களுக்காக 14 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 338 வீரர்கள், வாடிவாசல் களத்தில் இறங்கி சீறிப் பாய்ந்த காளைகளை பிடிக்க முயன்றனர்.
அப்போது காளைகள் முட்டியதில் 16 பேர் காயம் அடைந்தனர். அதில் பலத்த காயமடைந்த 4 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் வெள்ளிக் காசு, கடிகாரம், எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.