"வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்'
By DIN | Published On : 07th January 2019 07:00 AM | Last Updated : 07th January 2019 07:00 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பிரபாவதி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவுசெய்து, 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதோர், எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 மற்றும் பட்டப் படிப்பினைப் பதிவுசெய்து 5 ஆண்டுகள் நிறைவுற்று 2018 டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடர்ந்து புதுப்பித்து வருவோர், 2019 ஜனவரி முதல் உதவித்தொகை பெறலாம். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவுசெய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 50 ஆயிரத்துக்குள்ளும், தமிழகத்திலேயே கல்வி பயின்றவர்களாகவும், வேறு எந்த பணியிலும் ஈடுபடாதவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு மற்றும் பிற வகைகளில் எந்தவித நிதி உதவியும் பெறக்கூடாது. பள்ளி மற்றும் கல்லூரியில் சென்று படிப்பவராக இருக்கக் கூடாது.
தகுதியுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்வித்தகுதி சான்றுகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பத்தை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.