சுடச்சுட

  


  திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
  தேனி மாவட்டம், வீரபாண்டி முல்லைப் பெரியாற்றங்கரையில் உள்ள கண்ணீஸ்வரமுடையார் கோயில் அருகே சுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாதேவி தலைமை வகித்தார். இதில் பொதுமக்கள், தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
  பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பொங்கலிட்டு மகிழ்ந்த அமெரிக்கா, வெர்ஜீனியா பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கிராமியக் கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற தேவராடம், கும்மிப் பாட்டு கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர்.
  தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைத் தலைவர் ஆர்.முருகன் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. கல்லூரி செயலர் மகேஸ்வரன், கல்லூரி முதல்வர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  போடியில்: போடி மூணாறு சாலையில் உள்ள போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் பொங்கல் திருவிழா கல்லூரி தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. 
  கல்லூரி துணைத் தலைவர் கருப்பையா, செயலர் ராமநாதன், ஆட்சிக்குழு உறுப்பினர் கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் மலைச்சாமி தலைமையில் பேராசிரியர்கள் அலமேலு, மீனா, தேவர் பொம்மிநாயக்கர், பால்பாண்டி ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக கல்லூரி முதல்வர் டி.ராஜகுமாரன் வரவேற்றார்.
  திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியின் பல்துறை மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து, கல்லூரி வளாகத்தில் பொங்கல் வைத்தனர். அதைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் அ. பெத்தாலெட்சுமி முன்னிலையில், கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
  இதில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற மருத்துவர்கள் செல்வராஜ், ராஜாமணியம்மாள், சண்முகவடிவு ஆகியோர், மாணவிகள் தயாரித்த பொங்கலில் சிறப்பானதை தேர்வு செய்தனர். புவியியல் துறை மாணவிகள் தயார் செய்த பொங்கல் முதல் பரிசையும், மனையியல் துறையினர் தயார் செய்த பொங்கல் 2 ஆம் பரிசையும், கணினி அறிவியல் துறையினர் தயார் செய்த பொங்கல் 3 ஆம் பரிசையும் வென்றனர். 
  பரிசளிப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர் மு. கருப்பணக்கவுண்டர் சார்பில், மாணவிகளுக்கு 2ஆயிரம் மரக் கன்றுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, ஆங்கிலத் துறை தலைவர் அ.லதா வரவேற்றார். தமிழ் துறை தலைவர் பரமேஸ்வரி நன்றி கூறினார். 
  திண்டுக்கல் எம்.வி.எம். மகளிர் கலைக் கல்லூரியில் மாணவிகள், பேராசிரியர்கள் பங்கேற்ற பொங்கல்விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் முனைவர் லதாபூரணம் தலைமை வகித்தார்.
  பழனியில்: பழனியை அடுத்த தாளையூத்து சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. தமிழினம் தன் பண்பாட்டை மதிக்கிறதா, மறக்கிறதா' என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் சுப்பிரமணி தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் ஜெயலட்சுமி சுப்பிரமணி முன்னிலை வகித்தார். 
  பட்டிமன்றத்தின் தலைவராக பழனியாண்டவர் கல்லூரி பேராசிரியர் தங்க.ரவிசங்கர் செயல்பட்டார். பேச்சாளர்களாக மதுக்கூர் ராமலிங்கம், சின்னத்திரை நடிகர்கள் ஆர்த்தி, மதுரை முத்து, அறந்தாங்கி நிஷா, கோவை மஞ்சுநாதன், நாகர்கோயில் மலர்விழா உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் பழனி டிஎஸ்பி. விவேகானந்தன், பழனியாண்டவர் கல்லூரி முதல்வர்கள் புவனேஸ்வரி, அன்புச்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக கல்லூரி முதல்வர் தேவகி வரவேற்றார். 
  பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் முதல்வர் அன்புச்செல்வி, முனைவர் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவிகள் குலவையிட்டு பொங்கலை வைத்து கொண்டாடினர். பழனி தாராபுரம் சாலையில் உள்ள செயிண்ட் ஜோசப் மெட்ரிக். பள்ளியில் மாணவர்களும், மாணவிகளும் பொங்கல் விழா கொண்டாடினர். பழனி கென்னடி மெட்ரிக். பள்ளியில் மாணவர்கள், மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்ற பொங்கல்விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
  கொடைக்கானலில்: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரி சார்பில் அட்டுவம்பட்டி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. 
  அதைத்தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கொடைக்கானல் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் சந்திரமணி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியைகள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai