நத்தமாடிப்பட்டி, பெரியகலையமுத்தூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 873 காளைகள்: மாடு பிடி வீரர்கள் 25 பேர் காயம்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அடுத்துள்ள நத்தமாடிப்பட்டியில் வியாழக்கிழமை

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அடுத்துள்ள நத்தமாடிப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 373 காளைகளும், பழனி அருகேயுள்ள பெரியகலையமுத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 500 காளைகளும் பங்கேற்றன. இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள் 25 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள நத்தமாடிப்பட்டியில் பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக 400 காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டிருந்தன. அதேபோல், மாடு பிடிவீரர்கள் 354 பேர் பதிவு செய்திருந்தனர். 
 இந்நிலையில், போட்டியில் பங்கேற்க வந்த காளைகளை, கால்நடைத்துறை உதவி இயக்குநர் எஸ்.சுப்பையாபாண்டியன் தலைமையிலான கால்நடை மருத்துவக் குழுவினர்  பரிசோதித்தனர். போட்டியில் பங்கேற்க வந்த 378 காளைகளில், 5 காளைகளுக்கு வயது மற்றும் பிராணிகள் நல வாரியத்தில் பதிவுச்சான்றிதழ் பெறாத காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டது.   312 மாடு பிடி வீரர்களுக்கு நடைபெற்ற மருத்துவப் பரிசோதனையில், 8 பேருக்கு அனுமதி  மறுக்கப்பட்டது. திண்டுக்கல் கோட்டாட்சியர் ரா.ஜீவா போட்டிகளை தொடங்கி வைத்தார்.  நத்தமாடிப்பட்டி கிராமத்தின் முக்கியப் பிரமுகர்கள் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 
 வாடி வாசல் வழியாக சீறிவந்த காளைகளை பிடிப்பதற்கு 304 மாடு பிடி வீரர்கள் களம் இறங்கினர். காளைகளின் திமிலை கட்டியணைத்து சாகசம் செய்த வீரர்களுக்கு வெள்ளிக்காசு, மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், மிக்ஸி, கிரைண்டர், கடிகாரம் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. அதேபோல் வாடிவாசல் மைதானத்தின் 4 புறங்களிலும் மாடு பிடி வீரர்களை ஓடவிட்டு, யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.  காளைகளை பிடிக்க முயன்றதில் 15 வீரர்கள் காயம் அடைந்தனர். இதில் ஒருவர் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 
பழனி: பழனியை அடுத்த நெய்க்காரபட்டி பெரியகலையமுத்தூரில்  ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் சார்பில் வியாழக்கிழமை காலை ஜல்லிக்கட்டு  போட்டி நடைபெற்றது. டி.எஸ்.பி விவேகானந்தன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சார்ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் கண்காணிப்புபணியில் ஈடுபட்டிருந்தனர். 
  வாடிவாசலில்  இருந்து முதல் காளையாக காளியம்மன் கோயிலுக்கு சொந்தமான காளை வெளியேறியது. இதனைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 500க்கும் மேற்பட்ட காளைகள் வரிசையாக வாடிவாசலில் இருந்து வெளியேற்றப்பட்டன. காளைகளை அடக்க சுமார் 400 வீரர்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.  அவர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சுழற்சிமுறையில்  மாடு பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். துள்ளி வந்த காளைகளை வீரர்கள்  பாய்ந்து அடக்கினர். 
         காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்க நாணயம், வெள்ளி நாணயம்,  பீரோ, கட்டில்,  சேர், குத்துவிளக்கு, செல்போன்,  சுவர்கடிகாரம், உள்ளிட்ட பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை வீடுகளின் மாடிகளில் இருந்து ஏராளமானோர்  கண்டுகளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com