"நீடித்த கல்வி வளர்ச்சிக்கு பின்தங்கிய மாணவர்களை அரவணைத்துச் செல்லும் ஆசிரியர்களே தேவை'

கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களை அரவணைத்துச் செல்லக் கூடிய ஆசிரியர்களே நீடித்த கல்வி 

கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களை அரவணைத்துச் செல்லக் கூடிய ஆசிரியர்களே நீடித்த கல்வி வளர்ச்சிக்கு தேவை என காந்திகிராம கிராமியப் பல்கலை. துணைவேந்தர் சு.நடராஜன் பேசினார்.
 காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை சார்பில், கல்வியில் நீடித்த வளர்ச்சிக்கான கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது. பல்கலை. வளாகத்திலுள்ள வெள்ளிவிழா அரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கினை, துணைவேந்தர் சு.நடராஜன் தொடங்கி வைத்துப் பேசியது:  நாட்டின் பெருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் ஆகியவற்றுக்கு கல்வி அவசியம். இந்தியாவின் கிராமப்புறங்கள் வளர்ச்சிப் பெற அடிப்படை கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டுமென காந்தியடிகள் வலியுறுத்தினார். இன்றைக்கு நாடு முழுவதும் 900 பல்கலைக்கழகங்கள் மற்றும் 40ஆயிரம் கல்லூரிகள் செயல்பட்டு வந்தாலும், உயர் கல்வி பெற வேண்டிய 3 கோடி மாணவர்களில் 1.50  கோடி பேருக்கு மட்டுமே அதற்கான வாய்ப்பினை வழங்க முடியும் என்ற சூழல் உள்ளது. 
மீதமுள்ள 1.50 கோடி மாணவர்களும் உயர் கல்வியை கட்டாயம் பெற வேண்டும் என்ற நோக்கில், தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்-லைன் மூலமான படிப்புகளையும் மத்திய அரசு உருவாக்கி வருகிறது. நாடு சுதந்திரம் பெற்ற போது 15 சதவீதமாக இருந்த கல்வி அறிவு, இன்றைக்கு 74 சதவீதமாக உயர்ந்துள்ளது. 
அனைத்து மாணவர்களின் கவனத்தையும் ஈர்க்கக் கூடிய சிறந்த ஆசிரியர்கள் என்பது கல்வி வளர்ச்சியில் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களை அரவணைத்துச் செல்லக் கூடிய சிறந்த ஆசிரியர்களே நீடித்த கல்வி வளர்ச்சிக்கான இன்றைய தேவை. இளைஞர்களை பொருளாதார மேதைகளாகவும், அறிவியல் விஞ்ஞானிகளாகவும் உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் மட்டுமே உள்ளது என்றார். 
இதனைத் தொடர்ந்து, கருத்தரங்க மலரை துணைவேந்தர் சு.நடராஜன் வெளியிட, அதனை அனைத்து இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஆதிரேயா பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கல்வியியல் துறைத் தலைவர் ஏ.ஜாகிதா பேகம், அமைப்புச் செயலர் என்.தேவகி, பேராசிரியை பிஎஸ்.ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com