திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கு எதிர்ப்பு: கொடைக்கானலில் பொதுமக்கள் போராட்டம்
By DIN | Published On : 24th January 2019 01:01 AM | Last Updated : 24th January 2019 01:01 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து புதன்கிழமை பள்ளிக் குழந்தைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்தினர்.
கொடைக்கானல் நகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான மையங்களை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் நகர்ப் பகுதிகளில் இந்த திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாம்பார்புரம் பகுதியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில், அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பள்ளிக் குழந்தைகளை முன்னிறுத்தி புதன்கிழமை எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கொடைக்கானல் காவல் துறையினர் எதிர்ப்புத் தெரிவித்தவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது:
குப்பைகளிலிருந்து மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாகப் பிரித்தெடுத்து மக்கும் குப்பைகளை நவீன முறையில் மறுசுழற்சி செய்வதற்கான பணி திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணியாகும்.
இந்த திட்டமானது சென்னை, கோவை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் பிரச்னையின்றி செயல்பட்டு வருகிறது.
கொடைக்கானலில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்தத் திட்டம் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிப்பதற்கு நகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது என்றார்.