சாலை மறியல் போராட்டம்: திண்டுக்கல்லில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 3,228 பேர் கைது
By DIN | Published On : 29th January 2019 01:31 AM | Last Updated : 29th January 2019 01:31 AM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 3,228 பேரை, போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து, ஊதிய முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்காக, திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாகத் திரண்டனர். அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசிய ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், பின்னர் மறியலில் ஈடுபடுவதற்காக எம்ஜிஆர் சிலை நோக்கி புறப்பட்டனர். உடனே, அவர்களை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 1,295 பெண்கள் உள்பட 3,228 பேரும், திண்டுக்கல்லில் உள்ள 8 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படும்போது, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் முபாரக் அலி, துணைத் தலைவர் மங்களபாண்டியன் ஆகியோர் அங்கிருந்து வெளியேற முயன்றனர். ஆனால், அவர்கள் இருவரையும் வழிமறித்து கைது செய்து, போலீஸார் ஜீப்பில் ஏற்றினர்.
6,224 ஆசிரியர்கள் பங்கேற்பு: மாவட்டத்தில் தொடக்கக் கல்வி, உயர் நிலை மற்றும் மேல்நிலை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மொத்தம் 10,309 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 6,224 ஆசிரியர்கள் திங்கள்கிழமை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். ஆனாலும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் 2,339 ஆசிரியர்களில் 733 பேர் மட்டுமே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், பழனி, திண்டுக்கல், வேடசந்தூர், வத்தலகுண்டு கல்வி மாவட்ட அலுவலகங்கள், 16 வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் 29 பேர் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதில், அரசு ஊழியர்கள் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.