புறம்போக்கு இடத்துக்கு பட்டா வழங்கக் கோரி குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
By DIN | Published On : 29th January 2019 01:06 AM | Last Updated : 29th January 2019 01:06 AM | அ+அ அ- |

புறம்போக்கு இடத்துக்கு பட்டா வழங்கக் கோரி, வேடசந்தூரைச் சேர்ந்த பெண் தன் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்துள்ள நவாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் வே. நல்லம்மாள்(50). இவர், தனது 2 மகள்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்தார். ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் பகுதிக்கு வந்த அவர், திடீரென மண்ணெண்ணெய் கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றார். உடனே, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், மண்ணெண்ணெய் கேனை பறித்து நல்லம்மாளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், நல்லம்மாள் கூறியதாவது: எனது கணவர் வேல்முருகன் 4 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். தற்போது, எனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். இந்நிலையில், நாங்கள் குடியிருந்து வரும் புறம்போக்கு நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் அபகரித்து, தகர கொட்டகை அமைத்துள்ளார். இது தொடர்பாக, கடந்த டிசம்பர் 17ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்தேன். அதன்பேரில், எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால், வருவாய் ஆய்வாளர் சார்பில் பட்டா வழங்க இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், அந்த நபர் சார்பில் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே, காவல்துறை மூலம் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், வருவாய்த் துறை மூலம் பட்டா வழங்கவும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.