Enable Javscript for better performance
ஊழியர்கள் பற்றாக்குறை குஜிலியம்பாறை வட்டாரத்தில் பணப் பலன்களை பெற முடியாமல் 290 ஆசிரியர்கள் தவிப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஊழியர்கள் பற்றாக்குறை குஜிலியம்பாறை வட்டாரத்தில் பணப் பலன்களை பெற முடியாமல் 290 ஆசிரியர்கள் தவிப்பு

    By DIN  |   Published On : 01st July 2019 02:00 AM  |   Last Updated : 01st July 2019 02:00 AM  |  அ+அ அ-  |  

    பணியாளர் பற்றாக்குறையுடன் குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில், ஊதியம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பணப் பலன்களை பெற முடியாமல் 290 ஆசிரியர்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர்.
    திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் கல்வி மாவட்டத்திலுள்ள குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலகத்தின் கீழ் 98 அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 290-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளி ஆய்வு, மாணவர்களுக்கு தேவையான 12 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அரசு சார்பில் கேட்கப்படும் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் தொடர்பான புள்ளி விவரங்களை தொகுத்து வழங்குதல், பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தயாரித்தல், ஊதியம் சார்ந்த நிர்வாகம் உள்ளிட்டப் பணிகள் வட்டாரக் கல்வி அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
    ஆனால், குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலகத்தைப் பொருத்தவரை, கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக குறைவான அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுடனே செயல்பட்டு வரும் நிலை உள்ளது. குறிப்பாக 2 வட்டாரக் கல்வி அலுவலர்கள் இருக்க வேண்டிய நிலையில், ஒரு பணியிடம் தொடர்ந்து காலியாகவே இருக்கிறது. அலுவலகக் கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் உள்ளிட்ட 12 பணியிடங்களில், 2 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். 
    இதுபோன்ற சூழலில், ஒரே வட்டாரக் கல்வி அலுவலரால் 98 பள்ளிகளை ஆய்வு செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், குஜிலியம்பாறை வட்டாரத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்குவது முதல் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பணப் பலன்களை குறிப்பிட்ட காலத்தில் வழங்க முடியாத நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    இதுதொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் குஜிலியம்பாறை வட்டாரச் செயலர் அருள்செழியன் கூறியது: தமிழக அரசு உத்தரவிட்டு 40 நாள்களாகியும் கூட, கடந்த 5 மாதங்களுக்கான அகவிலைப்படியை குஜிலியம்பாறை வட்டார ஆசிரியர்கள் பெற முடியாத நிலை உள்ளது. ஜூன் மாதத்திற்கான ஊதியம், மாதத்தின் கடைசி வேலை நாளான ஜூன் 28ஆம் தேதியாகியும் பெற முடியவில்லை. வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை கணினிமயமாக்கும் பணி தாமதமாகியுள்ளது. இதனால், ஊதியப் பட்டியலை பெற முடியாது என வேடசந்தூர் சார் நிலை கருவூலக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். 
    இடவசதியின்றி நெருக்கடியான சூழலில், அடிப்படை வசதியில்லாமலும் குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலகம் உள்ளது. கல்வித் துறை நிர்வாகம் பணியிடங்களை முறையாக நிரப்பாத காரணத்தால், ஆசிரியர்கள் மட்டுமின்றி, பள்ளிகளின் செயல்பாடுகளும் முறையான ஆய்வு நடத்தப்படாமல் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த பிரச்னைக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தீர்வு காண முன்வர வேண்டும் என்றார்.
    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது:
    குஜிலியம்பாறை வட்டாரம் தொலைதூரத்தில் (திண்டுக்கல்லிலிருந்து 48 கி.மீட்டர்)  அமைந்திருப்பதால், அங்கு பணிபுரிவதை அலுவலர்களும், ஊழியர்களும் தண்டனையாக நினைக்கின்றனர். குறிப்பாக, ஆசிரியர் சங்கங்களின் நெருக்கடியும் அதிகமாக இருப்பதால், அலுவலர் நிலை பணியாளர்கள் இந்த வட்டாரத்திற்கு வருவதையே தவிர்க்கும் நிலை உள்ளது. 2019 ஜூலை 29ஆம் தேதி நிலவரப்படி 3 ஆண்டுகள் நிறைவு செய்த அலுவலர்கள், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட உள்ளனர். அப்போது குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கான பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குஜிலியம்பாறை வட்டாரத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றார்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp