சுடச்சுட

  

  மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முன் இளம் பெண் பெற்றோருடன் தீக்குளிக்க முயற்சி

  By DIN  |   Published on : 10th July 2019 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காதலுடன் சேர்த்து வைக்க கோரி இளம் பெண் ஒருவர் தனது பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.
   திண்டுக்கல் மேட்டுபட்டியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மனைவி டெமினா மேரி. அரசு பள்ளி ஆசிரியை. இவர்களது மகள் திவ்யா ரோஸ்லின் (26). திண்டுக்கல் பகுதியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது, பழனி திருநகரைச் சேர்ந்த அருள் ஜோஸ்பின் பிரான்சிஸ் என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளாக திவ்யா ரோஸ்லின் நெருங்கி பழகியுள்ளார். 
   தற்போது அருள் ஜோஸ்பின் பிரான்சிஸ் பழனி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திவ்யா ரோஸ்லினை திருமணம் செய்ய பிரான்சிஸ் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யா, திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்துள்ளாராம். உரிய நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திலும் திங்கள்கிழமை புகார் அளித்துள்ளார். தனது புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த திவ்யா, தனது பெற்றோருடன் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை வந்தார். அப்போது, தனது கையில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
   இதனை பார்த்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் பெட்ரோல் பாட்டிலை பறித்து தீக்குளிப்பு முயற்சியை தடுத்தனர். ஆனாலும், பெற்றோருடன் அமர்ந்து திவ்யா தர்னாவில் ஈடுபட்டார். சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல் நிலைய போலீஸார், பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இது குறித்து திவ்யா ரோஸ்லின் கூறுகையில், என்னை திருமணம் செய்வது கொள்வதாக உறுதியளித்த பிரான்சிஸ், பெற்றோர் பேச்சை கேட்டு என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்து, அவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai