ரூ. 90 லட்சம் செலுத்தி 2 ஆண்டுகளாகியும் "டிஜிட்டல் எக்ஸ்ரே' கருவிகள் கிடைக்கவில்லை!
By DIN | Published On : 12th July 2019 07:56 AM | Last Updated : 12th July 2019 07:56 AM | அ+அ அ- |

காசநோய் இல்லா கொடைக்கானல் மற்றும் ஊட்டி 2025 திட்டத்தின் கீழ் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் பெற தமிழ்நாடு மருந்து சேவைக் கழகத்திற்கு ரூ. 90 லட்சம் செலுத்தி 2 ஆண்டுகளாகியும் கருவிகள் வழங்கப்படாததால் அடுத்தக் கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய காசநோய் தடுப்புச் சங்கம் சார்பில், 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயாளிகளின் எண்ணிக்கையை 1 லட்சம் பேருக்கு 44 ஆகவும், 2035 ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் பேருக்கு 10 பேர் என்ற விகிதத்திலும் கட்டுப்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் குறிப்பிட்ட சில மாவட்டங்கள் மற்றும் வட்டங்களைத் தேர்வு செய்து, 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத பகுதியாக அறிவிப்பதற்கான திட்டத்தினை மத்திய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்திலுள்ள நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் ஆகிய பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கொடைக்கானல் வட்டத்தில் கடந்த 2015 ஆய்வின்படி 142 ஆக இருந்த காசநோயாளிகளின் எண்ணிக்கை 2016 இல் 138 ஆகவும், 2017 இல் 103 ஆகவும், 2018 இல் 79 ஆகவும் குறைந்துள்ளது. கொடைக்கானல் வருவாய் வட்டத்தை, காசநோய் இல்லா பகுதியாக மாற்றும் பணிகள் ரூ.70 லட்சம் செலவில் கடந்த 2018 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
கொடைக்கானல்
வட்டத்தில் 36,678 வீடுகளில் 1.30 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு தனி நபரையும் ஆய்வு செய்வதற்கு 96 பணியாளர்கள் கொண்ட 48 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
நடமாடும் டிஜிட்டல்
எக்ஸ்ரே கருவிகள்: காசநோய் இல்லா நீலகிரி மற்றும் கொடைக்கானல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று எக்ஸ்ரே எடுப்பதற்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வேன் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு வருவோரை பரிசோதிக்க டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த கருவிகளை பெறுவதற்காக, மாவட்ட நலச் சங்கத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 30 லட்சம் (திண்டுக்கல்), ரூ. 60 லட்சம் (ஊட்டி) என மொத்தம் ரூ. 90 லட்சம் தமிழ்நாடு மருந்து சேவைக் கழகத்திற்கு செலுத்தப்பட்டது. ஆனால், இதுவரை எக்ஸ்ரே கருவிகள் வழங்கப்படாததால், எக்ஸ்ரே எடுத்து அடுத்தக்கட்ட ஆய்வினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக கள ஆய்வில் ஈடுபடும் பணியாளர்கள் கூறியது:
கள ஆய்வுக்கு செல்லும்போது, சளியில் குறைவான கிருமிகள் இருக்கும் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே மூலமாக மட்டுமே காசநோய் பாதிப்பினை கண்டறிய முடியும். நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் இருந்தால், காசநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, துரிதமாக சிகிச்சை அளிக்க முடியும் என்றனர்.
லட்சத்தில் 209 பேருக்கு பாதிப்பு
1 லட்சம் மக்களில் 209 பேருக்கு இன்றைய நிலையில் காசநோய் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது 40 ஆக குறையும் போது அந்த பகுதி காசநோய் இல்லாத பகுதியாக அறிவிக்கப்படும். ஆனால் 1 லட்சம் மக்கள்தொகையில் 13 பேருக்கு மட்டுமே பாதிப்பு என்ற நிலையை 2035-க்குள் உருவாக்க இந்திய காசநோய் தடுப்புச் சங்கம் முயற்சி மேற்கொண்டுள்ளது.