மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த மேலாண்மை சிறப்பு முகாம்

தினமணி செய்தி எதிரொலியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழுவை  கட்டுப்படுத்துவதற்கான மேலாண்மை சிறப்பு முகாம், 4 துறைகள் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்தி எதிரொலியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழுவை  கட்டுப்படுத்துவதற்கான மேலாண்மை சிறப்பு முகாம், 4 துறைகள் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 20 ஆண்டுகளில் மக்காச்சோள சாகுபடி பரப்பு 50 சதவீதம் குறைந்துவிட்டதாகவும், படைப்புழு தாக்குதல் ஏற்பட்டு, போதிய விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் விவசாயிகளுக்கு இல்லாத நிலையில், 2019-20ஆம் ஆண்டுக்கான இலக்கினை அடைவதிலும் சிக்கல் எழுந்துள்ளதாக, தினமணியில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைத் துறை, மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம் (வாகரை), விதை சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்புத் துறை, வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் நலச் சங்கம் ஆகியன சார்பில், மக்காச்சோளப் பயிரில் படைப்புழு மேலாண்மை குறித்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மைய கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) தமிழ்செல்வன் தலைமை வகித்துப் பேசியது:

அட்மா திட்டத்தின் கீழ் பணிபுரியும் உழவர் நண்பர்கள் மூலம்,  ஒவ்வொரு கிராமத்திலும் படைப் புழு கட்டுப்பாடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறப்பான முறையில் செயல் விளக்கம் அளித்து,  திண்டுக்கல் மாவட்டத்தில் படைப்புழு தாக்குதலே இல்லை என்ற நிலையை உருவாக்கும் உழவர் நண்பர்கள் மற்றும் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் தலைமையில் கௌரவிக்கப்படுவார்கள். 

நிகழாண்டில் மாவட்டத்தின் இலக்கான 31ஆயிரம் ஹெக்டேர் மக்காச்சோள சாகுபடி பரப்பு என்ற நிலையை அடைவதற்கு, விவசாயிகளுடன் இணைந்து வேளாண்மை அலுவலர்களும் பணியாற்ற வேண்டும் என்றார்.

விதை ஆய்வு இணை இயக்குநர் சேகர் பேசியதாவது: மக்காச்சோள சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும், வரப்பு பயிராக சூரியகாந்தி, ஊடுபயிராக உளுந்து, பாசிப்பயறு,  தட்டைப்பயறு ஆகியவற்றை சாகுபடி செய்தால் படைப்புழுவை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். 

அதேபோல், படைப்புழு தாக்குதல்  மற்றும் மேலாண்மை குறித்த விவரங்களை, வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் அனைவரும் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.  மக்காச்சோள விதைகளை விநியோகிக்கும்போதே, ஊடு பயிர் மற்றும் வரப்பு பயிருக்கான விதைகளையும் சேர்த்தே வழங்கவேண்டும் என்றார்.

முகாமில், விதை ஆய்வு துணை இயக்குநர் பாலகிருஷ்ணன் (கரூர்), மக்காச்சோள ஆராய்ச்சி மைய உதவிப் பேராசிரியர் அறிவுடைநம்பி, உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) பெ. சுருளியப்பன், வேளாண்மை அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com