Enable Javscript for better performance
60 ஆண்டுகளாக 100 கிராம மக்களின் கனவாகத் தொடரும் ஆர்.கோம்பை அணை திட்டம்!- Dinamani

சுடச்சுட

  

  60 ஆண்டுகளாக 100 கிராம மக்களின் கனவாகத் தொடரும் ஆர்.கோம்பை அணை திட்டம்!

  By ஆ.நங்கையார்மணி  |   Published on : 14th July 2019 04:35 AM  |   அ+அ அ-   |    |  


  திண்டுக்கல் மாவட்டம்,  குஜிலியம்பாறை வட்டத்தைச் சேர்ந்த 100 கிராம மக்களின் 60 ஆண்டு கால கனவாக தொடரும் ஆர்.கோம்பை அணைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
  குஜிலியம்பாறை வட்டத்தில் தொப்பையசாமி மலை அமைந்துள்ளது. அய்யலூர் வனச்சரகத்திற்குள்பட்ட இம் மலை அடிவாரத்தில் ஆர்.கோம்பை கிராமம் உள்ளது. வானம் பார்த்த பூமியாக உள்ள ஆர்.கோம்பை, வடுகம்பாடி, ஆர்.புதுக்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, ஆர்.கோம்பை அடுத்துள்ள வேர்புளி என்ற இடத்தில் தொப்பையசாமி மலை அடிவாரம் மற்றும் புலிப்பாறை கரடு இடையே கரை அமைத்து, மழைநீரை தேக்குவதற்கு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சியின் கராணமாக, கடந்த 1986 இல் அணை கட்டுவதற்காக நில அளவீடு செய்யும் பணிகளும் நடைபெற்றன. ஆனால், இன்றுவரை அணை கட்டுமானப் பணி என்பது இப்பகுதி மக்களுக்கு கனவாகவே இருந்து வருகிறது. புலிப்பாறை கரடு முதல் தொப்பையசாமி மலை அடிவாரம் வரையிலும் சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு கரை அமைத்தால், மலைப் பகுதியிலிருந்து வரும் தண்ணீரை தேக்கி 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீராதாரமாக பயன்படுத்த முடியும். எனவே, ஆர்.கோம்பை சுற்றுவட்டார மக்கள் இக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
  இதுதொடர்பாக ஏ.எம்.பொன்னுச்சாமி என்பவர் கூறியதாவது: 
  1962இல் காங்கிரஸ் எம்பி.யாக இருந்த சௌந்தரம் ராமசந்திரன், முதல் முறையாக இப் பகுதியில் அணையின் அவசியத்தையும், சாத்தியக் கூறுகளையும் ஆய்வு செய்தார். அதன்பின்னர் சுமார் 25 ஆண்டுகள் கழித்து, 1986இல் இத்திட்டத்திற்கு மீண்டும் உயிரூட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அணைப் பகுதிக்கும், அண்ணாவிநகர் வழியாக இந்திரா காலனி வரையிலும், செம்மடை வழியாக கோம்பை வரையிலும் கால்வாய் அமைப்பதற்கும் நில அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. 
  ஒருசிலரின் எதிர்ப்பால், இத்திட்டம் இன்று வரை கனவாகவே உள்ளது. அணையின் நீர்பிடிப்புக்கான பகுதி, பெரும்பாலும் கோயில் நிலமாகவும், புறம்போக்கு நிலமாகவும் உள்ளது. 20 முதல் 30 சதவீதம் மட்டுமே பட்டா நிலங்களாக உள்ளன. 1987 வரை நெல் விளைந்த இந்த பூமி, இன்றைக்கு  மானாவாரி நிலமாக  விளைச்சலின்றி வறண்டு கிடக்கிறது என்றார்.
   எஸ்.முனியப்பன் கூறியது: ஆர்.கோம்பை அணை கட்டுவதற்கு 1990-களின் தொடக்கத்தில் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சரான கண்ணப்பன், நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போதும், உத்தேச நீர்பிடிப்பு பகுதியில் நிலம் உள்ள ஒருசிலரின் தூண்டுதலால் அமைச்சர் முன்னிலையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், ஆர்.கோம்பைக்கு மாற்றாக, ராமகிரி பகுதியில் ஒரு அணை கட்டப்பட்டது.   
   அதன் பின்னர், தொப்பையசாமி மலையிலிருந்து மழைநீர் வெளியேறும்  வரட்டாற்று ஓடைகளில் பல இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், மழைப் பொழிவு கூடுதலாக கிடைக்கும் காலங்களில், தடுப்பணைகளை எளிதாக கடக்கும் மழை வெள்ளம் அழகாபுரி அணைக்கு வெளியே, அமராவதி ஆற்றிலும், பின்னர் காவிரியிலும் கலந்து வீணாகிறது. இதற்கு தீர்வு ஏற்படும் வகையில் ஆர்.கோம்பை அணைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றார்.
  வீ.தர்மர் கூறியது: தொப்பையசாமி மலைக்கு கிழக்கே 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், கடவூர் பொன்னணையில் தேங்கும் நீரே, ஆர்.கோம்பை பகுதிக்கான நீராதாரமாக உள்ளது. ஆர்.கோம்பை அணைத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், இங்கு தேக்கி வைக்கப்படும் மழைநீர், ஆர்.கோம்பை, வடுகம்பாடி, ஆர்.புதுக்கோட்டை, கோவிலூர், கருங்குளம், பாலப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளுக்குள்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்க உதவியாக இருக்கும். 
   60 ஆண்டுகளாக பொதுமக்கள் விடுத்து வரும் கோரிக்கை, ஒருசிலரின் நலனுக்காக முடக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் குடிநீர் பிரச்னை இன்றைக்கு முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், 60 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஆர்.கோம்பை அணைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால், தற்போது நிலவும் குடிநீர் பிரச்னை மட்டுமின்றி நிலத்தடி நீராதாரமும் பாதிக்கப்பட்டு,  அடுத்த 10 ஆண்டுகளில் ஆர்.கோம்பை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வெளியேற வேண்டிய சூழல் உருவாகும் என்றார்.
  ஆர். கோம்பை பகுதியில் குடிநீர்  மற்றும் நிலத்தடி  நீராதாரத்தை  பாதுகாக்கும்  வகையில் இதி திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் முயற்சி  மேற்கொள்ள  வேண்டும் என்பதே  இப்பகுதி மக்களின்  எதிர்பார்ப்பாக  உள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai