பள்ளி அருகே தாழ்வாகச் செல்லும்மின்கம்பியால் விபத்து அபாயம்
By DIN | Published On : 19th July 2019 02:44 AM | Last Updated : 19th July 2019 02:44 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் அரசுப் பள்ளி மேற்கூரை அருகே தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை அமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல் பகுதிகளான இருதயபுரம், ஆனந்தகிரி, அட்டுவம்பட்டி, அப்சர்வேட்டரி, வில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மும்முனை மின்கம்பத்திலிருந்து செல்லும் மின்கம்பிகள் தாழ்வாகச் செல்கின்றன. இதனால் மழை மற்றும் காற்று காலங்களில் அப் பகுதிகளில் பல நேரங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன.
கடந்த மாதம் காற்றுடன் பெய்த மழையில் வில்பட்டி பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மேல் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இரவு நேரத்தில் விழுந்ததால் அசம்பாவிதம் ஏதுமின்றி மாணவர்கள் தப்பினர். இதனைத் தொடர்ந்து மீண்டும் சீரமைக்கப்பட்ட போதும் அப் பகுதியில் மின்கம்பிகள் தாழ்வாகவே அமைக்கப்பட்டன.
குடியிருப்புப் பகுதிகளிலும், மாணவர்கள் படிக்கும் பள்ளியின் மேற்கூரை அருகிலும் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை மாற்றியமைக்க மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.