பொதுமக்களின் மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவு: ஆட்சியர்
By DIN | Published On : 19th July 2019 02:44 AM | Last Updated : 19th July 2019 02:44 AM | அ+அ அ- |

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதே பிரச்னைக்கு மீண்டும் மனு அளிக்கும் வகையில் அலட்சியமாக செயல்படக் கூடாது என்றும், அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள மனுக்களை விசாரித்து தீர்வு காணும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு, ஆட்சியர் மு. விஜயலட்சுமி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று விசாரணை மேற்கொண்டார்.
கூட்டத்தில், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, நத்தம் மற்றும் நிலக்கோட்டை வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் 281 மனுக்கள் வழங்கப்பட்டன. மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட வட்டத்தைச் சேர்ந்த வருவாய் அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து, துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதில், முதியோர் உதவித் தொகை கேட்டு மனு அளிக்க வந்தவர்களிடம் சொந்த வீடு, நிலம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது, கடந்த ஓராண்டாக உதவித் தொகை பெற்று வந்ததாகவும், தற்போது நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் பயனாளிகள் தெரிவித்தனர். ஆனால், சொந்த வீடு உள்ளவர்கள் உதவித் தொகை பெற முடியாது எனத் தெரிவித்த ஆட்சியர், விசாரிப்பதாகக் கூறி அனுப்பி வைத்தார்.
சிலர் 4 முறைக்கு மேல் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தனர். தற்போது தன்னிடம் வழங்கப்பட்ட மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, ஆட்சியர் பொதுமக்களை அனுப்பி வைத்தார். பின்னர், அதிகாரிகளின் அலட்சியத்தை சுட்டிக்காட்டி பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது துரிதமாக செயல்பட வேண்டும் என்றும், மீண்டும் அதே பிரச்னைக்கு மனு அளிக்கும் வகையில் அலட்சியமாக செயல்படக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
மேலும், வருவாய்த் துறையின் மூலம் 6 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 27 பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை பெறுவதற்கான ஆணையையும் ஆட்சியர் விஜயலட்சுமி வழங்கினார்.
நிகழ்ச்சியில், திண்டுக்கல் கோட்டாட்சியர் கு. உஷா, வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.