சாணார்பட்டி அருகே ஆட்டு வியாபாரியிடம் ரூ.10 ஆயிரம் பறிப்பு
By DIN | Published On : 24th July 2019 06:50 AM | Last Updated : 24th July 2019 06:50 AM | அ+அ அ- |

சாணார்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை ஆட்டு வியாபாரியிடம் ரூ.10ஆயிரத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள கோனப்பட்டி ராமன்செட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் ரா.திருப்பதி (65). ஆட்டு வியாபாரியான இவர், அதிகாரிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் வியாபாரத்திற்காக ரூ.10ஆயிரத்தை எடுத்துக் கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
வீரசின்னம்பட்டி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் திருப்பதியிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த திருப்பதி, சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.