திண்டுக்கல்லில் ஆகஸ்ட் 1-இல் ஆட்சி மொழி பயிலரங்கம்
By DIN | Published On : 24th July 2019 06:48 AM | Last Updated : 24th July 2019 06:48 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம், ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) இளங்கோ தெரிவித்துள்ளது: அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழி திட்டச் செயலாக்கம் விரைவாகவும் முழுமையாகவும் நடைபெறுவதற்கு உதவிடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
அதன்படி, 2019ஆம் ஆண்டுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் ஆகஸ்ட் 1-ஆம் தேதியும், கருத்தரங்கம் 2-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை சார்ந்த அலுவலகத்திலிருந்தும் அலுவலர் அல்லது கண்காணிப்பாளர் நிலையில் ஒருவரும், உதவியாளர் அல்லது இளநிலை உதவியாளர் நிலையில் ஒருவரும் கலந்துகொள்ள வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவர் எனத் தெரிவித்துள்ளார்.