பேத்துப்பாறையில் அரசு அதிகாரிகள்- பொது மக்கள் கலந்தாய்வுக் கூட்டம்
By DIN | Published On : 24th July 2019 06:48 AM | Last Updated : 24th July 2019 06:48 AM | அ+அ அ- |

கொடைக்கானல் அருகே முகாமிட்டுள்ள யானைக் கூட்டத்தை, வனப் பகுதிக்குள் விரட்டுவது குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை, ஐந்துவீடு, பாரதி அண்ணா நகர், வெள்ளப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் தோட்டங்களில் யானைகள் முகாமிட்டுள்ளன. இவை, உணவுக்காக சில நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் நுழைகின்றன. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ள யானைகளை நிரந்தமாக வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பேத்துப்பாறையில் 100-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை அடையாள உண்ணாவிரதம் இருக்க முற்பட்டனர். இதையறிந்த, கொடைக்கானல் வட்டாட்சியர் வில்சன், வனச் சரகர் ஆனந்த் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அங்கேயே கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தனியார் தோட்டம் மற்றும் குடியிருப்புப் பகுதிக்குள் காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கக் கூடாது, அனைத்துப் பகுதிகளிலும் மின்விளக்கு எரிய வேண்டும், கோம்பையிலிருந்து அஞ்சுரான்மந்தை வரை சோலார் மின்வேலி அமைக்க வேண்டும், தனியார் தோட்டத்திலுள்ள முள்புதர்களை அகற்றி அப்பகுதியில் தனியார்களே மின்வேலி அமைத்துக் கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தினர்.
பின்னர், அரசுத் துறை அதிகாரிகள் பேசியதாவது: யானைகள் முகாமிட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களும், வனத் துறையினரும் இணைந்து யானையை விரட்டுவது, வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசின் நிதி உதவி கிடைக்கச் செய்வது மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கொடைக்கானல் ஊராட்சி நிர்வாகம் மூலம் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.