Enable Javscript for better performance
வடமதுரை அருகே மதுபானக் கடைக்கு எதிர்ப்பு: போலீஸ் குவிப்பால் பரபரப்பு- Dinamani

சுடச்சுட

    

    வடமதுரை அருகே மதுபானக் கடைக்கு எதிர்ப்பு: போலீஸ் குவிப்பால் பரபரப்பு

    By DIN  |   Published on : 25th July 2019 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டம், காணப்பாடியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடைக்கு எதிராக பொதுமக்கள் புதன்கிழமை போராட்டம் நடத்த திட்டமிட்டதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
     வடமதுரையை  அடுத்துள்ள காணப்பாடி பகுதியில் உள்ள பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரதான பகுதியில் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. வடமதுரை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பலர், காணப்பாடி மதுபானக் கடைக்கு வந்து செல்வதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் அளிக்கப்பட்டு வந்தது. 
     மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் அந்த மதுபானக் கடையை மூடக் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. அந்தந்த நேரத்திற்கு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சமரசம் செய்வது வழக்கம். ஆனாலும்,  கடையை இடமாற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், அந்த மதுபானக் கடையை புதன்கிழமை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். ஏற்கெனவே, கடந்த முறை நடைபெற்ற போராட்டத்தின் போது 300க்கும் மேற்பட்ட மக்கள் திரண்ட நிலையில், புதன்கிழமை போராட்டத்தை எதிர்கொள்ள காவல் துறை சார்பில் ஏராளமான போலீஸார் காணப்பாடி மதுபானக் கடை  முன்பு குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
     ஆனால் காவல் துறை எதிர்பார்த்தப்படி பொதுமக்கள் அதிக அளவில் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. காணப்பாடியைச் சேர்ந்த சிலர் மட்டுமே பொதுமக்கள் சார்பில் பிரச்னை குறித்து பேசுவதற்கு முன் வந்தனர். இதனை அடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் 10 நாள்களில் அந்த கடை இடமாற்றம் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனை அடுத்து போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai