முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
அகரம் தாமரைக்குளத்தை தூர்வாரக் கோரிக்கை
By DIN | Published On : 30th July 2019 09:09 AM | Last Updated : 30th July 2019 09:09 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம் அகரம் அருகேயுள்ள தாமரைக்குளத்தினை தூர்வாரி, அதற்கான வரத்து வாய்க்கால், தடுப்பணைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகரம் கிராமம் அருகே ஆவாரம்பட்டி, கருங்கல்பட்டி, மேல்கரைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயனடையும் வகையில் 115 ஏக்கர் பரப்பளவிலான தாமரைக்குளம் உள்ளது. இந்த குளத்தை நம்பி சுமார் 700 ஏக்கர் நிலங்கள் உள்ளன.
தற்போது இந்த குளம் மேடாகி தண்ணீர் சேகரமாகி நிற்க முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த குளத்தை தூர்வாரி இதற்கு வரும் வாய்க்கால்களை சீரமைத்துத்தர வேண்டும் என தாமரைக்குளம் நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தாமரைக்குளத்துக்கு தண்ணீர் வரும் ராஜவாய்க்காலில் கோட்டூர் ஆவாரம்பட்டி காளியம்மன் கோயில் அருகே பாலம் உடைந்திருப்பதால் தண்ணீர் வருவதில் சிக்கல் நிலவுகிறது.
இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தும் பயனில்லை. அதே போல பிரதான வாய்க்காலில் சேர் உறிஞ்சும் மடையில் உள்ள தடுப்புகள் சேதமானதோடு அருகிலுள்ள ராஜவாய்க்கால் வரை இருபுறமும் கான்கிரீட் சுவர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் தண்ணீர் வீணாகிறது.
ஆகவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை
மேற்கொண்டு தற்போதே குடகனாறு அணைக்கட்டு, அறுத்தோண்டி மறுக்கால் கதவணைகளை சரி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த மனுவை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.