Enable Javscript for better performance
அரசு மருத்துவமனைகளில் 51 மருத்துவர் பணியிடங்கள் காலி: நோயாளிகள் அலைகழிப்பு!- Dinamani

சுடச்சுட

    

    அரசு மருத்துவமனைகளில் 51 மருத்துவர் பணியிடங்கள் காலி: நோயாளிகள் அலைகழிப்பு!

    By DIN  |   Published on : 01st June 2019 07:02 AM  |   அ+அ அ-   |    |  

    திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 185 மருத்துவர் பணியிடங்களில் 51 இடங்கள் காலியாக உள்ளதால்,  அருகிலுள்ள அரசு  மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அலைகழிக்கப்படுவதாக புகார்  எழுந்துள்ளது. 
    திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மட்டுமின்றி, பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, ஆத்தூர், பட்டிவீரன்பட்டி, தாண்டிக்குடி, பண்ணைக்காடு ஆகிய 13 இடங்களில் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக உள்ள திண்டுக்கல்லில் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள் என நாள்தோறும் 4 ஆயிரம் பேர் சிகிச்சைப் பெறுகின்றனர். இதேபோல் பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையும்  அதிகரித்து  வருகிறது.
    51 இடங்கள் காலி: மாவட்டம்  முழுவதுமுள்ள 13 அரசு மருத்துவமனைகளுக்கு 185 மருத்துவர்  பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போதைய நிலையில் 134 மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். தாண்டிக்குடி மற்றும் பட்டிவீரன்பட்டி அரசு மருத்துவமனைகளில் மொத்த மருத்துவர்களின் பணியிடங்களும் காலியாக உள்ளதால், பிற அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்களே மாற்றாக பணிபுரியும் நிலை உள்ளது. இதனால் பெரும்பாலான நேரங்களில், இந்த மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகள், அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 
    அதேபோல் நத்தம் அரசு மருத்துவமனையில் நிர்ணயிக்கப்பட்ட 9 மருத்துவர் பணியிடங்களில், 4 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. ஆத்தூர் அரசு மருத்துவமனையை பொருத்தவரை 5 பணியிடங்களில், 3 இடங்கள் காலியாக உள்ளன. இதுபோன்ற காரணங்களால், பட்டிவீரன்பட்டி, தாண்டிக்குடி, நத்தம், ஆத்தூர் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளிகள், பெரும்பாலும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். இருப்பிடத்தின் அருகிலேயே அரசு மருத்துவமனை இருந்தும், தொலை தூரங்களில் உள்ள பிற அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதன் மூலம் நோயாளிகள் அலைகழிப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
    வத்தலகுண்டுக்கு கூடுதல் மருத்துவர்கள் தேவை: வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் இதுவரை 4 மருத்துவர் பணியிடங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை மற்றும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூடுதல் மருத்துவர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. நோயாளிகள் அலைகழிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில், காலியாக உள்ள இடங்களில் துரிதமாக மருத்துவர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளின் படுக்கை வசதியின் அடிப்படையிலேயே மருத்துவர் பணியிடங்கள் முன்பு உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்றைய நிலையில் அரசு மருத்துவமனைக்கும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல் அரசு மருத்துவமனைகளில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 
    இதன் காரணமாக ஒவ்வொரு அரசு மருத்துவமனைக்கும் தலா 5 மருத்துவர் பணியிடங்கள் இருக்க வேண்டும் என தமிழக அரசு கொள்கை முடிவினை மேற்கொண்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வட்டார அரசு மருத்துவமனைகளுக்கு குறைந்தபட்சம் 5 மருத்துவர் பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. மேலும், காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும் என்றார்.


     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp