முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு: திண்டுக்கல் மாநகராட்சி வார்டுகள் இடஒதுக்கீடு: அரசிதழில் வெளியிடுவதில் இழுபறி!

திண்டுக்கல் மாநகராட்சி வார்டுகள் இடஒதுக்கீடு (ஆண், பெண்) தொடர்பாக முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள்

திண்டுக்கல் மாநகராட்சி வார்டுகள் இடஒதுக்கீடு (ஆண், பெண்) தொடர்பாக முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பால், அரசிதழில் வெளியிடுவதற்கு கடந்த 9 நாள்களாக மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற முடியாமல் மாநகராட்சி அலுவலர்கள் தவித்து வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலுக்காக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கான வார்டுகள் ஒதுக்கீட்டிற்கான பட்டியல் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக அரசிதழில் வெளியிடும் பணி முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்) எதிர்ப்பு காரணமாக தொடர்ந்து தாமதமாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
திண்டுக்கல் மாநகராட்சிக்கான வார்டுகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள், கடந்த 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி அப்போதைய மக்கள் தொகையான 2,07,324 யை அடிப்படையாக கொண்டு, 29 மற்றும் 43 ஆகிய 2 வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவினருக்கும், 10 மற்றும் 28 ஆகிய 2 வார்டுகள் தாழ்த்தப்பட்டோர் பெண்களுக்கும், 3, 5, 6, 9, 11, 13, 15, 19, 20, 23, 24, 27, 30, 31, 36, 37, 38, 40, 41, 42, 45, 47 ஆகிய 22 வார்டுகள் பெண்கள் பொது பிரிவினருக்கும், 1, 2, 4, 7, 8, 12, 14, 16, 17, 18, 21,  22, 25, 26, 32, 33, 34, 35, 39, 44, 46, 48 ஆகிய 22 வார்டுகள் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 
பரிந்துரை பட்டியலின்படி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 வார்டுகளை, பொது வார்டுகளாக மாற்றக் கோரி அதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் 5 பேர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதில் 3 பேர் பகுதிச் செயலர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் சி.சீனிவாசன் அலுவலகத்தில் கடந்த 4 நாள்களாக பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், திங்கள்கிழமை (ஜூன் 10) மாலை 2 மணி நேரத்திற்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. மக்கள் தொகை அடிப்படையிலேயே வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாது எனவும் மாநகராட்சி அலுவலர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஆனால், முன்னாள் உறுப்பினர்கள் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால், வார்டு இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கப்பட்ட ஜூன் 14 ஆம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில்,  திண்டுக்கல் மாநகராட்சியில் வார்டு மறுவரையின்படி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வார்டுகளிலுள்ள மக்கள் தொகை அடிப்படையிலேயே ஆண், பெண் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை 50.18க்கு மேல் 56.37 சதவீதம் வரை கொண்ட 22 வார்டுகள் மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  அதேபோல் 44.36 முதல் 50 சதவீதம் பெண்கள் கொண்ட 22 வார்டுகள் பொது வார்டுகளாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 
இட ஒதுக்கீட்டு முறையை பொருத்தவரை வெளிப்படை தன்மையோடு பணிகள் நடைபெற்றுள்ளன. ஜூன் 14 ஆம் தேதிக்குள் வார்டுகள் இட ஒதுக்கீட்டை அரசிதழில் வெளியிட வேண்டும் என கடந்த 26 ஆம் தேதி அறிவுறுத்தப்பட்டது. மாநகராட்சி சார்பில் பரிந்துரை செய்து 9 நாள்களாக மாவட்ட ஆட்சியரின் அனுமதிக்காக காத்திருக்கிறோம் என்றார்.
முன்னாள் மாமன்ற உறுப்பினர் இரா.விஜயக்குமார்(திமுக):  திமுகவைச் சேர்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் வார்டுகளான 19, 30, 45 ஆகியவை இந்த முறை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், திமுக சார்பில் யாரும் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை. அதிமுகவினர் மட்டுமே தற்போது வார்டுகளை மாற்ற வலியுறுத்தி வருகின்றனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com