தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 200 பேர் வருகைப் பதிவு திடீர் ரத்து: ஆத்தூர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம்,  ஆத்தூர் ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில்  200 பேர் வருகைப் பதிவு

திண்டுக்கல் மாவட்டம்,  ஆத்தூர் ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில்  200 பேர் வருகைப் பதிவு திடீரென ரத்துச் செய்யப்பட்டதால் பயனாளிகள் ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
ஆத்தூர் ஒன்றியம், பாளையன்கோட்டை ஊராட்சியில்  தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.  
இதைத் தொடர்ந்து, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் தலைமையில் அதிகாரிகள் பாளையன்கோட்டை ஊராட்சியில் சில தினங்களுக்கு முன்பு  ஆய்வு செய்தனர். அப்போது 60 பேர் பணிக்கு வராமலேயே வருகை பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் புதன்கிழமை அக்கரைப்பட்டி ஊராட்சியில் பணி ஆய்வாளர் ராணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது  மல்லையாபுரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் மதிய உணவு இடைவேளையில் சாப்பிடுவதற்காக சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளின் 
வருகைப் பதிவை பணி ஆய்வாளர் ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. 
இதைக் கண்டித்து, செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை  கிராம மக்கள் முற்றுகையிட்டனர். தகவலறிந்த, செம்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். 
இதுகுறித்து பயனாளிகள் கூறுகையில், மதிய உணவுக்குச் சென்ற எங்களது வருகைப் பதிவை ரத்து செய்த அதிகாரிகள், வேலைக்கு வராதவர்களை, வேலைக்கு வந்ததாகக் கணக்கு காட்டி முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சிகளிலும் இத்திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.  
அனைத்து ஊராட்சிகளிலும் தினசரி சுமார் 200 பேர் வரை போலிலியான பயனாளிகளை பதிவு செய்து வருகின்றனர். எனவே ஆத்தூர் ஒன்றியத்தில் சிறப்பு தணிக்கை நடத்தி 
முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com