எரியோடு அருகே மாயமான 5 சிறுமிகள் திருச்சியில் மீட்பு
By DIN | Published On : 14th June 2019 07:17 AM | Last Updated : 14th June 2019 07:17 AM | அ+அ அ- |

எரியோடு அருகே காணாமல் போன பள்ளி மாணவிகள் இருவர் உள்பட 5 சிறுமிகள், திருச்சி அருகே மீட்கப்பட்டு பெற்றோரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அடுத்துள்ள செல்லக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகள் அபிநயா(13). அதே பகுதியைச் சேர்ந்த சற்குணம் மகள்கள் போதும்பொண்ணு(13) மற்றும் பெருமாயி (16), முத்து மகள்கள் சின்னத்தாள் (16) மற்றும் சுதா (13). இதில், அபிநயா மற்றும் சுதா ஆகியோர் அங்குள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் அபிநயா, சுதா ஆகியோர் புதன்கிழமை பள்ளிக்கு சென்றிருப்பதாக நினைத்து பெற்றோர் காத்திருந்தனர். ஆனால், பள்ளிக்கு செல்லாத அந்த சிறுமிகள், தனது அக்காள் மற்றும் உறவினர் சிறுமிகளுடன் சேர்ந்து திருச்சி அடுத்துள்ள குலுமணி என்ற இடத்தில் நடைபெற்ற திருவிழாவுக்கு சென்றுள்ளனர்.
அதற்கான பணத்தையும் வீட்டிலிருந்தே எடுத்துச் சென்றுள்ளனர். மாணவிகள் உள்பட 5 சிறுமிகள் காணாமல் போனதை அறிந்த பெற்றோர், எரியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே சிறுமிகள் 5 பேரும் குலுமணி கிராமத்தில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, திருச்சி சென்ற உறவினர்கள் 5 சிறுமிகளையும் மீட்டு செல்லக்குட்டியூருக்கு வியாழக்கிழமை அழைத்து வந்தனர்.
5 சிறுமிகள் மாயமான சம்பவம் செல்லக்குட்டியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.