உணவுப் பாதுகாப்பு தின விழிப்புணர்வு கண்காட்சி
By DIN | Published On : 19th June 2019 07:39 AM | Last Updated : 19th June 2019 07:39 AM | அ+அ அ- |

பழனி பாரத் வித்யா பவன் பள்ளியில் உலக உணவுப் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு உணவுப் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஜூன் ஏழாம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு பழனியில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சண்முகநதி பாரத் வித்யாபவன் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் உணவுப் பாதுகாப்பு, உணவு குறித்த மனிதர்களின் பொறுப்புணர்வு குறித்தும் உணவு பாதுகாப்புக்கான 5 தூண்கள் என்ற தலைப்பிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சியை பழனி சார்ஆட்சியர் அருண்ராஜ் தொடக்கி வைத்தார். மாவட்டக் கல்வி அலுவலர் கருப்புச்சாமி முன்னிலை வகித்தார். பழனி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ராமமூர்த்தி பேசினார். உணவை கையாளும்போது பராமரிக்க வேண்டிய சுகாதாரம், சமையலறை மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல், பாதுகாப்பான உணவுகளுக்கான வழிமுறைகள், உணவை உட்கொள்ளும் முன்பு கலப்படம் மற்றும் கெட்டுப்போகாமல் இருத்தல் ஆகியவற்றை உறுதி செய்வது குறித்தும், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களை வாங்கும்போது கவனிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு செய்முறை மூலமாக விளக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இயற்கையான சத்தான உணவுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.