"உள்ளாட்சி அலுவலர்கள் முயற்சித்தால் நெகிழியை முழுமையாக ஒழிக்க முடியும்'

உள்ளாட்சி அலுவலர்கள் தீவிரமாக முயற்சித்தால் அடுத்த ஓராண்டில் நெகிழியை முழுமையாக ஒழிக்க முடியும்

உள்ளாட்சி அலுவலர்கள் தீவிரமாக முயற்சித்தால் அடுத்த ஓராண்டில் நெகிழியை முழுமையாக ஒழிக்க முடியும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.
 மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றத் துறை சார்பில், அபாயகரமான கழிவு, திடக் கழிவு,  மின்னணு கழிவு, உயிரி மருத்துவக் கழிவு, நெகிழி கழிவு மற்றும் கட்டடக் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள உள்ளாட்சி அலுவலர்களுக்கான 2 நாள் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
திண்டுக்கல் - பழனி சாலையிலுள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற கருத்தரங்குக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். தேசிய உற்பத்தி மன்றத்தின் துணை இயக்குநர் கே.வி.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார். 
இதில் கருத்தரங்கை தொடக்கி வைத்து ஆட்சியர் பேசியதாவது: 6 வகையான கழிவுகளை அகற்றுவது தொடர்பாக நாடு முழுவதும் 20 நகரங்கள் தேர்வு  செய்யப்பட்டு கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் திண்டுக்கல் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதில்,  முதல்கட்டமாக  திண்டுக்கல்லில் அதற்கான கருத்தரங்கம் நடைபெறுகிறது. 
திடக்கழிவு மேலாண்மையை பொருத்தவரை, கழிவுகளை பெறும் இடம் தொடக்கி, அவற்றை அழிப்பது வரையிலும் சங்கிலி தொடராகப் பணிகள் நடைபெற வேண்டும். ஒரு இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், பணிகள் முழுமையாக பாதிக்கப்படும். 
குப்பையில் மருத்துவக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட  ஊசி, பிளேடு, நெகிழி, காய்கறி கழிவுகள் உள்பட பல்வேறு கழிவுகள் கொட்டப்படும்போது, அவற்றை தனி மனிதனால் பிரித்து எடுப்பது கடினம். இந்த மனநிலையை பொதுமக்களிடம் எடுத்துரைத்து, வீட்டுகளிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது உள்ளாட்சி அலுவலர்களின் பொறுப்பு. இந்தியாவை பொருத்தவரை  60 முதல் 70 சதவீத கழிவுகள், காய்கறிகள், உணவுப் பொருள்கள் போன்றவையாக  உள்ளன. இவை 6 மணி நேரத்திற்குள் அகற்றப்படாதபட்சத்தில், சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். இந்த வகை கழிவுகளை வீடுகளிலிருந்தே தனியாக பிரித்துக்  கொடுத்தால், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு எளிதாக இருக்கும். 
திடக்கழிவுகளைப் பொருத்தவரை ஒரே இடத்தில் சேகரிப்பதற்கு பதிலாக, அந்தந்த பகுதி வாரியாக தனித் தனியாக மேலாண்மை செய்வது எளிதாக இருக்கும். அதேபோல் திருமண மண்டபங்கள், உணவகங்கள் போன்ற அதிக கழிவுகள் பெறப்படும் இடங்களில் அவற்றை தனியாக பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  நெகிழி கழிவுகளால், நிலம் மட்டுமின்றி நீர்நிலைகளும்  மாசுபடுகின்றன. கட்டடக் கழிவுகள் சாலையோரங்களிலும், நீர்நிலைகளிலுமே கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், பல்வேறு நீர்நிலைகள் காணாமல் போய்விட்டன. கட்டடக் கழிவுகளை கொட்டுவதற்கான இடத்தை உள்ளாட்சி அமைப்புகள் கண்டறிய வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆணை இல்லாமலே, கன்னியாகுமரி மாவட்டத்தில் நெகிழிக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நெகிழியை தீவிரமாக கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சி அலுவலர்கள் முயற்சித்தால் அடுத்த ஓராண்டிற்குள் நெகிழியை முழுமையாக ஒழிக்க முடியும்  என்றார்.
இதில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா, மாநகராட்சி ஆணையர் (பொ) பாலசந்திரன், உதவி இயக்குநர்கள் குருராஜன் (பேரூராட்சிகள்), கருப்பையா (ஊராட்சிகள்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com