கொடைக்கானல் மலைச் சாலையில் குவி ஆடிகளால் விபத்துகள் குறைவு

கொடைக்கானல் மலைச் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள குவி ஆடிகளால் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. 

கொடைக்கானல் மலைச் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள குவி ஆடிகளால் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. 
கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு வழியாக வரும் வாகனங்கள்  காட்ரோட்டிலிருந்து சுமார் 58-கி.மீ தூரமும், பழனியிலிருந்து வரும் வாகனங்கள் சுமார் 60 கி.மீ தூரம் மலைச்சாலை வழியே பயணிக்க வேண்டும்.  இந்நிலையில் மலைச்சாலையில் காட்ரோட்லிருந்து டம்டம் பாறை வரையில் சுமார் 25 கி.மீ-க்கு இரு வாகனங்கள் செல்லும் அகலச் சாலையாக உள்ளது. அதன் பின் 33 கி.மீ தூரமுள்ள மலைச்சாலை குறுகியதாக உள்ளது. இதேபோல பழனி மலைச்சாலை முழுவதும் மிகவும் குறுகிய சாலையாகும். மலைச்சாலை பயணங்களின் போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் மலைச்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்பதற்காக இயற்கை அழகை மறைத்து வைத்துள்ள விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. மேலும் சாலையோரங்களில் சிவப்பு நிற ஒளிரும் பட்டைகள் வைக்கப்பட்டன. சில இடங்களில்  வேகத்தடைகளும் அமைக்கப்பட்டன. 
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறையின் சார்பில் கொடைக்கானல்-பழனி மலைச்சாலைகளில் குறுகிய மற்றும் வளைவுகளில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் குவி ஆடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்ணாடிகளில் 10 மீட்டர் முதல் 100 மீட்டர் தூரத்தில் வரும் வாகனங்களை பார்க்க முடியும். இதனால் வாகனங்களில் செல்பவர்கள் விபத்துகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும்  இந்த குவி ஆடிகளைச் சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் கூறியது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வரும் வாகனங்கள் 40 கி.மீ வேகத்தில்  மட்டுமே செல்ல வேண்டும்.  ஆண்டுக்கு 35 முதல் 40 வரை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த விபத்துகளில் சுமார் 10 முதல் 15 பேர் வரை இறந்துள்ளனர். 
இவற்றை தவிர்ப்பதற்காக  மாவட்ட காவல் துறை சார்பில் கொடைக்கானல் மலைச்சாலைகளில் முக்கிய இடங்களில் குவி ஆடிகள் அமைக்கப்பட்டன. சேதமைடந்த இடங்களில் மீண்டும் குவி ஆடிகள் வைக்கப்பட்டன. இதனால் தற்போது விபத்துகள் வெகுவாக குறைந்துள்ளன. குவி ஆடிகளை சேதப்படுத்துபவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com