வழக்குரைஞருடன் மோதல்: காத்திருப்போர் பட்டியலில் பெண் காவல் ஆய்வாளர்

வழக்குரைஞருடன் மோதலில் ஈடுபட்ட பெண் காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க டிஐஜி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

வழக்குரைஞருடன் மோதலில் ஈடுபட்ட பெண் காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க டிஐஜி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
  திண்டுக்கல் மகளிர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை தஞ்சமடைந்த காதல் ஜோடியிடம், காவல் ஆய்வாளர் வசந்தி விசாரணை மேற்கொண்டார். அப்போது பெண் வீட்டாரின் தரப்பில் சீலப்பாடியைச் சேர்ந்த வழக்குரைஞர் தியாகு காவல் நிலையத்திற்கு வந்தார். இதனிடையே ஆய்வாளர் வசந்தி மற்றும் வழக்குரைஞர் தியாகு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் மோதலாக மாறியது. அதனைத் தொடர்ந்து, தியாகு தன்னை தாக்க வருவதாக வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதே நேரத்தில், ஆய்வாளர் தன்னைத் தாக்கியதாக தியாகு புகார் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வழக்குரைஞர்கள், திண்டுக்கல் வடக்கு காவல் நிலையம் முன் மறியலில் ஈடுபட்டனர். ஆய்வாளர் வசந்தி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாத நிலையில், வழக்குரைஞர்கள் வடக்கு காவல் நிலையத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
காத்திருப்போர் பட்டியலில் ஆய்வாளர்: இதனிடையே பிரச்னை குறித்து கேட்டறிந்த திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் க.ஜோதி நிர்மல்குமார், ஆய்வாளர் வசந்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யவும், அவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.
ஆண்டிபட்டி: இந்நிலையில் வழக்குரைஞர் தியாகுவால் தாக்கப்பட்டு காயமடைந்ததாக கூறப்படும் ஆய்வாளர் வசந்திக்கு திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இச்சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் வசந்தியின் கணவர் சரவணக்குமார் கூறியது,  காவல்துறையில் பணிபுரியும் பெண் போலீஸாருக்கு உரிய பாதுகாப்பு இல்லை. எனது மனைவி மீது தாக்குதலில் ஈடுபட்ட வழக்குரைஞர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com