அழிவின் விளிம்பில் சுண்ணாம்பு காளவாசல் தொழில்!

மூலப் பொருளான சுண்ணாம்பு  கற்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் பழமையான சுண்ணாம்பு காளவாசல் தொழில் அழிவின் விளிம்பில் உள்ளது.

மூலப் பொருளான சுண்ணாம்பு  கற்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் பழமையான சுண்ணாம்பு காளவாசல் தொழில் அழிவின் விளிம்பில் உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுண்ணாம்பு காளவாசல் தொழில், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பரபரப்பாக நடைபெற்று வந்தது. புதிய கட்டடங்கள் மட்டுமின்றி, பொங்கல், கிறிஸ்துமஸ், குழந்தை பிறப்பு, பூப்புனித நீராட்டு விழா, திருமணம் போன்ற சடங்கு நிகழ்ச்சிகளின் போதும் வீடுகளுக்கு சுண்ணாம்பு அடிப்பது வழக்கமாக இருந்து வந்தது. இதனால் ஆண்டு முழுவதும் சுண்ணாம்பு விற்பனை நடைபெற்று வந்தது. 
ஆனால், 1990-களின் தொடக்கத்தில் தனியார் நிறுவனங்கள் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கலர் சுண்ணாம்பு பவுடர்களின் வருகைக்கு பின், குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிறுதொழிலாக மேற்கொண்டு வந்த சுண்ணாம்பு காளவாசல் தொழில் நலிவடையத் தொடங்கியது.  பல தலைமுறைகளாக அந்த சமுதாய மக்கள் மேற்கொண்டு வந்த தொழிலுக்கு மாற்று தேட வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டது. மேலும் சுண்ணாம்பு காளவாசல் தொழிலுக்கு மூலப் பொருளான சுண்ணாம்பு கற்களை பெறுவதிலும் சிறுதொழிலாளர்களுக்கு சிக்கல் எழுந்தது. தனியார் குவாரிகள் தீவிரமாக செயல்படத் தொடங்கியது முதல், உரம், கண்ணாடிபாட்டில், பற்பசை (பேஸ்ட்), சோப்பு உள்ளிட்ட பொருள்களின் தயாரிப்புக்கு சுண்ணாம்பு கற்கள் அதிகம் தேவைப்பட்டன. பெரு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு கூடுதல் விலைக்கு  சுண்ணாம்பு கற்கள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, மூலப் பொருளைப் பெற முடியாமலே, பல குடும்பங்கள் இத்தொழிலை விட்டு வெளியேறிவிட்டன. 
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 25 குடும்பங்கள் சுண்ணாம்பு காளவாசல் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலை மாறி, இன்றைக்கு ஒருவர் மட்டுமே அத்தொழிலை மேற்கொண்டு வரும் நிலை உள்ளது. இதுதொடர்பாக நத்தம் பகுதியைச் சேர்ந்த முத்துராமன்(55) கூறியது: 
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லாரி சுண்ணாம்பு கற்களை ரூ.170-க்கு பெற்று வந்தோம். இன்றைக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்தாலும் சுண்ணாம்பு கற்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரூ. 3 ஆயிரம் வருமானம் பெற, மூலப் பொருளான சுண்ணாம்பு கற்களை வாங்கவே ரூ.5 ஆயிரம் செலவிட வேண்டிய சூழல் உள்ளது. 
பெயிண்ட் பயன்பாட்டிற்கு வந்த பின், புதிதாக கட்டப்படும் கட்டடங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பதை நிறுத்தி விட்டனர். எங்கள் குழந்தைகளும் படித்து வேறு பணிகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். 
பல தலைமுறையாக நடைபெற்று வந்த இந்த தொழில் என் தலைமுறையோடு முடிவுக்கு வந்துவிடும் என்றார். 

பாக்கெட் சுண்ணாம்பு
சுண்ணாம்பு கற்களை பொடியாக்கி அதனை 2 பங்கு அடுப்பு கரியுடன் சேர்த்து காளவாசலில் 4 மணி நேரம் அவித்து, அதனை தண்ணீருடன் சேர்த்து சுண்ணாம்பு பாலை பிரித்து, தெளிய வைத்து, உலர்த்தி பாக்கெட்டுகளில் அடைத்து வெற்றிலை பாக்கு போடுவோரின் தேவைக்காக விற்பனைக்கு அனுப்புகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, சிவகங்கை மாவட்டம் சிங்கபுணரி, மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி, மேலூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளுக்கு வெற்றிலை சுண்ணாம்பு நத்தத்திலிருந்து மட்டும் தான் அனுப்பப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com