ஒன்றிய குழு உறுப்பினர் பதவி: மன்னவனூரிலிருந்து மாற்ற எதிர்ப்பு
By DIN | Published On : 25th June 2019 07:08 AM | Last Updated : 25th June 2019 07:08 AM | அ+அ அ- |

கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூரிலிருந்து பூண்டிக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி மாற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அடுத்துள்ள மன்னவனூர் ஊராட்சிக்குள்பட்ட மன்னவனூர், கவுஞ்சி, கும்பூர், கீழானவயல், மஞ்சம்பட்டி ஆகிய 5 கிராமங்கள் உள்ளன. கொடக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்கு மன்னவனூரிலிருந்து ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டு வந்தார். இந்நிலையில், தற்போது ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி பூண்டிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மன்னவனூர் ஊராட்சிக்குள்பட்ட முக்கிய பிரமுகர்கள், மேல்மலை ஒன்றிய அதிமுக செயலர் முருகன் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுதொடர்பாக ஒன்றிய செயலர் முருகன் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்த தொடங்கிய காலம் முதல், ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி மன்னவனூருக்கு வழங்கப்பட்டு வந்தது. அதில் தற்போது மாற்றம் செய்து, பூண்டிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தை ரத்து செய்து மீண்டும் மன்னவனூருக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்றார். அப்போது கவுஞ்சி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.