பழனி அருகே பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் தப்பினர்
By DIN | Published On : 25th June 2019 07:11 AM | Last Updated : 25th June 2019 07:11 AM | அ+அ அ- |

பழனியை அடுத்த தொப்பம்பட்டி அருகே பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் உயிர் தப்பினர்.
பழனியை அடுத்த அக்கரைப்பட்டியில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு தொப்பம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை பள்ளி முடிந்த பின் பள்ளி வேன் ஒன்று, குழந்தைகளை ஏற்றிக் கொண்டு தொப்பம்பட்டி வழியாக கீரனூர் நோக்கி சென்றுள்ளது. வேனை புங்கமுத்தூரை சேர்ந்த மணிவாசகம் (25) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. அங்கு இருந்த ஊராட்சி மோட்டார் அறையில் மோதி வேன் நின்றது. இதில் வேனின் முன்பகுதி முற்றிலும் சேதமானது. இந்த விபத்தில் குழந்தைகள் லேசான சிராய்ப்புக் காயங்களுடன் உயிர் தப்பினர்.
பள்ளி வாகனங்களை சமீபத்தில் அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் வாகனத்தில் ஏற்பட்ட பழுதால் விபத்து நடந்ததா அல்லது ஓட்டுனரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா என கீரனூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.