"துணைநிலை நீர் மேலாண்மை திட்டப் பணிகளுக்கு விவசாயிகளுக்கு ரூ.65ஆயிரம் மானியம்'

துணை நிலை நீர் மேலாண்மை திட்டப் பணிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 65 ஆயிரம் மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை நிலை நீர் மேலாண்மை திட்டப் பணிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 65 ஆயிரம் மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமையின் வேளாண்மை துணை இயக்குநர் எம். ஹனிஜாய் சுஜாதா தெரிவித்துள்ளது: திண்டுக்கல் மாவட்டத்தில் நுண்ணீர் பாசன முறையில் சாகுபடி செய்து, பயிர் விளைச்சல் அதிகரிக்கும் நோக்கில் பிரதம மந்திரியின் நீர் பாசனத் திட்டம் ஒரு துளி நீரில் அதிக பயிர் என்னும் துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தை, மத்திய-மாநில அரசுகள் அறிமுகப்படுத்தியுள்ளன. 
இத்திட்டத்தின் கீழ், டீசல் பம்பு அல்லது மின் மோட்டார் நிறுவுவதற்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். பாசன நீரினை வயலுக்கு அருகே வீணாகாமல் கொண்டு செல்வதற்கான நீர் பாசனக் குழாய்கள் அமைப்பதற்கு 50 சதவீதம் அல்லது ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.      பாதுகாப்பு வேலியுடன் கூடிய  தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான செலவில் 50 சதவீதம் அல்லது ஒரு கன மீட்டருக்கு  ரூ.350-க்கு மிகாமலும் அல்லது அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். இந்த மானிய உதவிகளை, 1.10.2018-க்குப் பின் சொட்டு நீர் அல்லது தெளிப்பு நீர் அல்லது மழைத்தூவுவான் அமைத்த விவசாயிகளும், இனி அமைக்கவுள்ள விவசாயிகளும் மட்டுமே பெறலாம். 
தகுதியான விவசாயிகள், நிலத்தின் சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம்,  நீராதாரத்துக்கான ஆவணம், ஆதார் எண், மார்பளவு புகைப்படம், வங்கி கணக்கு எண் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை அலுவலகத்தில் அளித்து, முன்னுரிமை பட்டியலில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.  முன்பதிவு செய்த விவசாயிகள், உரிய அலுவலரிடம் பணி ஆணையினை பெற்று தங்கள் சொந்த செலவில் பணிகளை மேற்கொண்டு, அதற்கான செலவின விவரங்களுடன், பணி முடிக்கப்பட்ட புகைப்படங்களுடன் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தமிழக வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை அங்கீகரிக்கும் நுண்ணீர் பாசன நிறுவனங்களுக்கு அதற்கான 60 சதவீத மானியத் தொகை விடுவிக்கப்பட்ட பின், துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடுகளான தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி, மின்  மோட்டார் உள்ளிட்ட பணிகள் முடித்த பின் மானியத் தொகை விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். 
இந்த வாய்ப்பினை, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, உதவி பொறியாளர் அ. குமணவேல் என்பவரை 99727-62471 என்ற எண்ணிலும், விரிவாக்க அலுவலர் ம. மகாலட்சுமியை 88254-25749 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com