திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும் 40 வயதுக்கு உள்பட்ட 7.70 லட்சம் வாக்காளர்கள்!

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 15.18 லட்சம் வாக்காளர்கள் இருந்தாலும், 40 வயதுக்குள்பட்ட 7.70 லட்சம்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 15.18 லட்சம் வாக்காளர்கள் இருந்தாலும், 40 வயதுக்குள்பட்ட 7.70 லட்சம் வாக்காளர்களே வெற்றியை தீர்மானிக்கும்  சக்தியாக உள்ளனர். 
 திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 17.68 லட்சம் வாக்காளர்கள் வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதில், வேடசந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 2.50 லட்சம் வாக்காளர்கள், கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரை தேர்வு செய்வதற்காக வாக்களிக்க உள்ளனர்.
 பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம் மற்றும் திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 15.18 வாக்காளர்கள், திண்டுக்கல் மக்களவை உறுப்பினரை தேர்வு செய்ய உள்ளனர். தற்போதைய நிலையில் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் சார்பில் பலமுனைப் போட்டி உருவாகியுள்ளது. இந்நிலையில், சுயேட்சைகளும் களம் இறங்கத் தயாராகி வருகின்றனர்.
 மொத்தமுள்ள 15.18 லட்சம் வாக்குகளில், 50 வயதுக்கு உள்பட்டோருக்கான வாக்குகள் மட்டும் சுமார் 11 லட்சம். அதிலும் குறிப்பாக 30 வயதுக்கு உள்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 3.10 லட்சமாக உள்ளது.
 40 வயதுக்கு மேற்பட்ட 7.50 லட்சம் வாக்காளர்களின் ஆதரவு, அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கு  மட்டுமே கணிசமான வாக்குகள் கிடைக்கும். ஆனால், 40 வயதுக்கு உள்பட்ட சுமார் 7.70  லட்சம் வாக்காளர்களில், அதிகமானோரின் வாக்குகளை கவரும் வேட்பாளரே திண்டுக்கல் தொகுதியில் வெற்றிபெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
40 வயதுக்கு உள்பட்ட வாக்காளர்கள், சமூக ஊடகங்களில் அதிக ஈடுபாடு உள்ளவர்களாக உள்ளனர். 
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் பாரபட்சமின்றி சமூக ஊடகங்களில் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். முன்னெப்போதும் இல்லாத வகையில், நெட்டிசன்களின் விமர்சனங்கள் அனைத்து தரப்பினரையும் ஈர்த்து வருகின்றன. 
இந்த சூழலில், விமர்சனங்களை கடந்து, 40 வயதுக்கு உள்பட்டவர்களின் வாக்குகளை அதிக அளவில் பெற வேண்டிய கட்டாயம் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 2004 தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட என்எஸ்வி.சித்தன் (காங்கிரஸ்) 1.56 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், 2009 இல் மீண்டும் போட்டியிட்ட அவர் 54 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி வாகை சூடினார்.
கடந்த 2014  தேர்தலில் வெற்றிபெற்ற 
மு.உதயகுமார் (அதிமுக) 1.28 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தல்களில் வெற்றியை உறுதி செய்யும் வாக்காளர்கள் 40 வயதுக்கு உள்பட்டவர்களாகவே இருந்துள்ளனர்.


திண்டுக்கல் மாவட்டத்தில் வயது வாரியாக வாக்காளர்கள் விவரம்: 
18 -19 வயது - 26,600
20 -29 வயது - 3.46 லட்சம்
30 -39 வயது - 3.94 லட்சம்
40 - 49 வயது - 3.91 லட்சம்
50 - 59 வயது - 2.98 லட்சம்
60 -69 வயது - 1.87 லட்சம்
70 -79 வயது - 95 ஆயிரம்
80 வயதுக்கு மேல் - 28 ஆயிரம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com