நிலக்கோட்டை,  கொடைக்கானல் பகுதிகளில் தேர்தல் ரோந்து வாகனங்களை கண்காணிப்பதில் சிக்கல்

நிலக்கோட்டை மற்றும் கொடைக்கானல் பகுதியில் தேர்தல் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள வாகனங்களில்

நிலக்கோட்டை மற்றும் கொடைக்கானல் பகுதியில் தேர்தல் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ள போதிலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திண்டுக்கல்லில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு மற்றும் விடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 7 தொகுதிகளுக்கும் தலா ஒரு குழுவும், கொடைக்கானல் பகுதிக்கு தனியாக 1 குழுவும் என மொத்தம் 24 குழுக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதில், பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் ரோந்து செல்லும் 16 கார்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் அந்த வாகனங்கள் எந்தப் பகுதியில் சென்று கொண்டிருக்கின்றன என்பதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 
 ரோந்து செல்லும் வாகனங்கள் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தாலோ, வாகனத்தின் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்தோலோ ஜிபிஆர்எஸ் கருவி மூலம், கட்டுப்பாட்டு அறையில் உள்ள பெரிய கணினித் திரையில் சுட்டிக் காட்டப்பட்டுகிறது. இதனால் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் நிலக்கோட்டை மற்றும் கொடைக்கானல் பகுதியில் ரோந்து செல்லும் 2 வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும் அந்த வாகனங்களின் இருப்பிடத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
 இதனிடையே தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட 16 வாகனங்களில், 2 வாகனங்களை மட்டும் ஏன் தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கேள்வியெழுப்பினார். 
மேலும் தொழில்நுட்பப் பிரச்னையை சரி செய்து,  பிற வாகனங்களைப் போல் கண்காணிப்பதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com