கொடைக்கானலில் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 22nd March 2019 07:25 AM | Last Updated : 22nd March 2019 07:25 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கொடைக்கானலைச் சேர்ந்த சாஜ் தாக்கல் செய்த மனு:
நான் கொடைக்கானலில் சோப்பு தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். எனது மனைவியை கொடைக்கானலைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து, அதனைக் கூறி பலமுறை மிரட்டி வந்துள்ளார். இது குறித்து 2019 ஜனவரி 1ஆம் தேதி கொடைக்கானல் காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்தும் குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், பிப்ரவரி 7 ஆம் தேதி எனது மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணத்தையும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். குற்றம்சாட்டப்பட்டவர் அவரது பலத்தை பயன்படுத்தியதால் கொடைக்கானல் காவல் ஆய்வாளர் முறையாக புகாரை விசாரிக்கவில்லை. மேலும் குற்றவாளியை காப்பாற்றும் நோக்கில் செயல்படும் அவரால் நியாயமான முறையில் விசாரணை நடைபெறாது. எனவே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.சேஷசாயி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பல தெளிவான வழிமுறைகளை வழங்கியுள்ளது. மனுதாரர் அளித்த புகாருக்கு தாமதமாகவே போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில் முறையாக விசாரித்திருந்தால் இந்நிகழ்வு நடைபெற்றிருக்காது எனக் குறிப்பிட்டு, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, 4 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், வழக்கை முறையாக விசாரிக்காத கொடைக்கானல் காவல் ஆய்வாளர் மீது திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...