திண்டுக்கல் அருகே சாலை வசதி கோரி கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
By DIN | Published On : 24th March 2019 12:47 AM | Last Updated : 24th March 2019 12:47 AM | அ+அ அ- |

கடந்த 12 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் சாலை வசதி நிறைவேற்றித் தராததைக் கண்டித்து, திண்டுக்கல் அருகே கிராம மக்கள் கருப்புக் கொடி கட்டி தேர்தலைப் புறக்கணிப்பதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
ஆத்தூர் அடுத்துள்ள சீவல்சரகு ஊராட்சிக்குள்பட்ட பொம்மனம்பட்டி கிராமத்தில் 40 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தக் கோரி மனு அளித்து வந்துள்ளனர். ஆனால் சாலை வசதி ஏற்படுத்துவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக இப்பகுதிக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் வசதியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியினர் சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி கேட்டு தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அப்பகுதியினர் கூறுகையில், ஆதிலெட்சுமிபுரம் சின்னாளப்பட்டி செல்லும் சாலையிலிருந்து பொம்மனம்பட்டிக்கு வரும் பாதையில் சாலை வசதி கேட்டு கடந்த 12ஆண்டுகளாக போராடி வருகிறோம். அரசு அலுவலர்களிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அதற்காக பொம்மனம்பட்டி பிரிவு பகுதியிலும், கிராமத்திலுள்ள வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றியுள்ளோம் என்றனர்.