பணத்திற்கு வாக்களிக்க மாட்டேன் என உணவகங்களில் மணி அடித்து உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 28th March 2019 08:06 AM | Last Updated : 28th March 2019 08:10 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல்லிலுள்ள 6 உணவகங்களில், உறுதி மொழி ஏற்று மணி அடித்துச் செல்லும் நடைமுறை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, நாடு முழுவதம் பல்வேறு வகையான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திண்டுக்கல் நகரிலுள்ள 6 உணவு விடுதிகளில் பொதுமக்கள் உணவருந்த அமரும் இடங்களில், உணவு பரிமாறப்படும் மேஜைகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய சிறிய பதாகை வைக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் டி.ஜி.வினய் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியது: உணவகங்களில் பொதுமக்கள் உணவருந்திவிட்டு செல்லும் போது, வாக்காளர்களாகிய நாங்கள் ஓட்டிற்கு பணம் பெற மாட்டோம் என்ற உறுதி மொழியை ஏற்கும் பதாகை நிறுவப்பட்டுள்ளது.
அந்த உறுதிமொழியை வாசித்துவிட்டு, அங்கு பொருத்தப்பட்டுள்ள மணியை ஒலிக்க செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள தொலைக்காட்சி பொருத்தப்பட்டுள்ள அனைத்து உணவகங்களிலும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்களை ஒளிபரப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில், நேர்மையான முறையில் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து, நம் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியின்போது, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன அலுவலர் மு.நடராஜன் உடனிருந்தார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...